டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயன்ற பிரிட்டிஷ் நபரின் பின்னணி என்ன?

டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயன்ற பிரிட்டிஷ் நபரின் பின்னணி என்ன?

அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பின் கூட்டத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியை பறித்து அதன் மூலம் டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயன்றதற்காகவும், கொலை செய்யப்போவதாக கூறியதற்காகவும் இருபது வயதான பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

லாஸ் வெகாஸில் கடந்த சனிக்கிழமை ட்ரம்பின் ஊர்வலத்தின் போது மைக்கல் ஸ்டாண்ட்ஃபோர்ட் என்னும் நபர் காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்து குடியரசுக் கட்சியின் சார்பிலான அதிபர் தேர்தல் வேட்பாளரை சுடமுயன்றார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

ட்ரம்பை கொல்வதற்காகவே தான் கலிபோர்னியாவிலிருந்து நெவேடா வரை வாகனத்தை ஓட்டி வந்ததாக சாண்ட்ஃபோர்ட் சொன்னதாக ரகசிய காவல்துறை சொல்கிறது.

இதற்காக ஓராண்டு திட்டமிட்டதாகவும் துப்பாக்கி சுடும் பயிற்சிக்களத்திற்கு ஒரு நாள் முன்பு சென்று சுடுவதற்கு பயின்றதாக கூறியதாகவும் சொல்கிறார்கள்.

லாஸ் வேகாஸில் இருக்கும் மத்திய நீதிமன்றத்தில் இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் வேலையற்றவர் என்பதும் காரிலேயே வாழ்பவர் என்பதும் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக அமெரிக்காவிலேயே தங்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது.

அவர் இங்கிலாந்தின் சர்ரே பிராந்தியத்தின் டார்கிங் என்கிற இடத்தைச் சேர்ந்தவர்.

அவர் மனநல பிரச்சனைகளுக்குள்ளானவர் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்ற நடைமுறைகளில் பங்கேற்கும் அளவுக்கு தெளிவாகவே தோன்றினார்.

இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் வன்முறைகளுக்கு பஞ்சமில்லை. டொனால்ட் ட்ரம் போகுமிடமெல்லாம் எதிர்ப்பு எழுந்தது. கைகலப்பு சகஜம். உணர்ச்சிக்கொந்தளிப்புகளோ உச்சத்தில்.

இந்த தேர்தலும் ஒட்டுமொத்த அமெரிக்காவும் எதை நோக்கி செல்கிறது என்பதே பல அமெரிக்கர்களின் கவலையாக இருக்கிறது.