டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்ய விரும்பினேன்: பேரணியில் கைதானவர் வாக்குமூலம்

டொனால்ட் டிரம்பின் பேரணியில் ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டனை சேர்ந்த ஒருவர், தன்னை விசாரித்து வரும் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம், குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பை தான் கொலை செய்ய விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டொனால்ட் டிரம்பின் பேரணியில் கைது செய்யப்பட்ட மைக்கேல் சான்போர்ட்

நீதிமன்ற ஆவணங்களின்படி 19 வயதாகும் மைக்கேல் சான்போர்ட் எனப்படும் அந்த நபர், சனிக்கிழமையன்று டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்வதற்காக, தான் லாஸ் வேகாஸ் நகரத்துக்கு காரில் வந்ததாக கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த ஒரு வருடமாக தான் திட்டமிட்டு வந்ததாக அவர் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்யும் முயற்சியில் தான் கொல்லப்படுவதை எதிர்பார்த்ததாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை, வன்முறையின் விளிம்பில் நடந்து வருகிறது. தான் செல்லுமிடமெல்லாம் டொனால்ட் டிரம்ப் ஆர்ப்பாட்டங்களை சந்தித்து வருகிறார்.