ஐ.நா எச்சரிக்கையை மீறி வட கொரியா ஏவுகணை சோதனை

  • 22 ஜூன் 2016

ஐ.நா., வின் எச்சரிக்கையையும் மீறி, வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டதற்கு, அதன் அண்டை நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை XINHUA

அந்த ஏவுகணைகள் ஜப்பானை நோக்கி செலுத்தப்பட்டதாக தோன்றுகிறது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டோக்கியோவில் பாதுகாப்பு அமைச்சர் ஜென் நகடானி இதுபற்றிக் கூறும்போது, ஏவுகணைகளில் ஒன்று அதிக உயரத்தில் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் பயணித்து, கடலில் விழுந்தது எனத் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் இந்த ஏவுகணை நிபுணத்துவம் வாய்ந்ததாகவும், அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வட கொரியா இதற்கு முன்பு நடத்திய நான்கு சோதனைகளும் தோல்வியடைந்தன.

இந்த ஆண்டு முன்னதாக வட கொரியா அணு வெடிச் சோதனை ஒன்றை நடத்தி, பின்னர் நீண்ட தூரம் செல்லும் ராக்கெட் ஒன்றை ஏவியதை அடுத்து அதன் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேசத் தடைகள் மேலும் பலப்படுத்தப்பட்டன.