அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் திறன்: வடகொரிய அதிபர் பெருமிதம்

வடகொரியா கடந்த புதன்கிழமை நடத்திய ஏவுகணை சோதனை, பசிஃபிக் பகுதியில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தங்களுக்கு உள்ள திறமையை நிரூபித்திருக்கிறது என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

இரண்டு நடுத்தர ரக ஏவுகணைகள் சோதனையை, கிம் நேரடியாக மேற்பார்வையிட்டதாக பியாங்யாங்கில் உள்ள அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இரண்டு ஏவுகணைகளில் ஒன்று தோல்வியடைந்துவிட்டதாகவும், இன்னொன்று பல நூறு கிலோ மீட்டர் பயணித்ததாகவும் அமெரிக்க மற்றும் தென் கொரிய ராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அணுசக்தித் தாக்குதலை நடத்தும் தங்களுக்குள்ள திறமைக்கு வலுச்சேர்த்திருப்பதாக இந்த மிகப்பெரிய நிகழ்வு அமைந்திருப்பதாக வடகொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை, ஐ.நா. மன்றத்தின் தடைகளை மீறி நடத்தப்பட்டுள்ளது.