துப்பாக்கி கலாசாரம்: அமெரிக்க எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்

துப்பாக்கிக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகளை அமல்படுத்தக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில், ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதிநிதிகள் சபை நிகழ்ச்சி நிரல்களின்படி, அடுத்த வாரம் ஓய்வு விடப்படும் நிலையில், துப்பாக்கி கலாசாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டம் பற்றி விவாதிக்க, அவை நடவடிக்கைகள் தொடர வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஃபுளோரிடா மாகாணத்தில் ஒருபாலுறவினருக்கான இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து அவர்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

பதினொரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அவைத் தலைவர் பால் ரியான் அவை நடவடிக்கைகளைத் துவங்க முற்பட்டபோது, உறுப்பினர்கள் கூச்சலிட்டு அதைத் தடுத்தார்கள். அதே நேரத்தில், இந்தப் போராட்டம் ஒரு விளம்பர நாடகம் எனக் கூறி அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்தார் பால் ரியான்.