பிரிட்டன் வாக்கெடுப்பு: ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஐரோப்பியத் தலைவர்கள் அழைப்பு

  • 24 ஜூன் 2016

மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் வாக்களித்திருப்பதற்கு பிறகு, வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஐரோப்பிய தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஐரோப்பியத் தலைவர்கள் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அழைப்பு

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சீர்திருத்தங்களும், மாற்றங்களும் கொண்டு வருவதற்கான எச்சரிக்கை அழைப்பு இது என்றும் பலர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் விளைவுகளை மதிப்பிட செவ்வாய்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடைபெற இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption பிரிட்டன் வெறியேறும் நிபந்தனைகள் பற்றிய பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்க வேண்டும் - மான்ஃபிரட் வெப்பர்

இந்நாடாளுமன்றத்திலுள்ள மிக பெரிய குழு உறுப்பினர்களின் தலைவரான மான்ஃபிரட் வெப்பர், பிரிட்டனின் வெளியேறுவது பற்றிய நிபந்தனைகள் பற்றிய பேச்சுவார்த்தைகளை உடனடியாக தொடங்க வேண்டும், பிரிட்டனுக்குள் நடைபெறும் அரசியல் குழப்பங்களின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

மீதியுள்ள 27 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதில் உறுதியாக இருக்கின்றன என்று ஐரோப்பிய கவுன்சிலின் அதிபர் டொனால்ட் டஸ்க் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption இப்போதைய 27 நாடுகளும் ஒன்றித்திருப்பதில் உறுதி - டொனால்ட் டஸ்க்

ஆனால், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க்கிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதற்கு எதிர்ப்பான கருத்துடைய கட்சிகள், இத்தகைய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தங்கள் நாடுகளிலும் நடத்த வேண்டுமென அழைப்புவிடுத்துள்ளன.