ஓராண்டுக்கு முன் கொல்லப்பட்டோருக்கு துனிசியாவில் நினைவு சடங்குகள்

ஓராண்டுக்கு முன்னால் துப்பாக்கிதாரி ஒருவர் தனியாக நடத்திய வன்முறையால் கொல்லப்பட்ட 38 சுற்றுலாப் பயணிகளின் நினைவாக துனிசியாவின் உல்லாச ஓய்வகக் கடற்கரையில் நினைவு சடங்குகள் நடைபெறவுள்ளன.

Image caption துனிசியாவின் உல்லாச ஓய்வகக் கடற்கரையில் கொல்லப்பட்ட 38 பேரில் 30 பேர் பிரிட்டிஷ் மக்கள்

இந்த சம்பவத்தில் இறந்த 30 பிரிட்டிஷ் மக்கள் உள்பட இறந்தோர் அனைவரின் பெயர்களும் வாசிக்கப்பட்டு, சூல்ஸ் என்ற கடற்கரைக்கு அருகிலுள்ள எல் கான்டாவ்ரி துறைமுகத்தின் மணற்பரப்பில் மலர்கள் வைக்கப்படும்.

பலர் கொல்லப்பட்ட இந்த சம்பவத்திற்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாத குழுவினர் பொறுப்பேற்றனர்.

இந்த தாக்குதலால் துனிசியாவின் சுற்றுலா துறை மிக மோசமாக பாதிப்புக்குள்ளானது.

பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளதாகவும், இப்போது சுற்றுலாப் பயணியர் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானதே என்று ஆட்சியாளர்கள் வலியுறுத்தினாலும், அங்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று பிரிட்டிஷ் வெளிநாட்டு அலுவலகம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.