பிரிட்டன் தொழிற் கட்சியில் கோர்பினுக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை 7 உறுப்பினர்கள் ராஜிநாமா

படத்தின் காப்புரிமை Getty
Image caption தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் வாக்களித்ததை தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பு, பெரிய எதிர்க்கட்சியான தொழிற் கட்சியிலும் சூழ்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற கூடாது என்ற பிரச்சாரத்தை தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் கையாண்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தொழிற்கட்சியின் நிழல் அமைச்சரவையை சேர்ந்த பாதி உறுப்பினர்கள் இன்றைய தினம் தங்களுடைய பதவிகளை ராஜிநாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை, தொழிற்கட்சியின் நிழல் அமைச்சரவையை சேர்ந்த 7 உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்கள்.

தொழிற்கட்சி உறுப்பினர்களின் இந்த ராஜிநாமாக்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், முதலாவதாக நிழல் சுகாதார செயலர் ஹெய்தி அலெக்ஸாண்டர் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.

பிரிட்டன் கோரிக்கைகளுக்கு பதில்களை கொடுக்கும் திறன் கோர்பினுக்கு குறைந்துவிட்டதாக ஹெய்தி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption முன்னாள் நிழல் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி பென்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீறும் வகையில் கோர்பின் செயல்படும் பட்சத்தில், சக தொழிற்கட்சி உறுப்பினர்களை ராஜிநாமா செய்யக்கோரி ஊக்குவித்ததாக கூறி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தொழிற்கட்சியை சேர்ந்த ஹிலாரி பென் என்ற நிழல் வெளியுறவுத்துறை செயலர் முன்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ஐரோப்பா ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் நடைமுறையின் போது, அரசிடம் கேள்விகளை எழுப்ப தொழிற் கட்சியில் வலுவான தலைமை வேண்டும் என பிபிசியிடன் பென் கூறியுள்ளார்.

தொழிற்கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையிலான ஆதரவை கோர்பின் பெற்றிருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டி தொழிற்கட்சியின் பாரம்பரிய ஆதரவாளர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.