ராஜினாமா அறிவிப்புக்கு பிறகு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் தோன்ற உள்ளார் டேவிட் கேமரன்

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன், பதவி விலகப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு இன்று வரவுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

பிரதமர் கேமரன் ராஜிநாமா செய்யும்போது, அந்தப் பதவிக்குப் போட்டியிடும், முன்னிலையில் உள்ள இரண்டு வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரங்களை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் இருதரப்புகளும் மீண்டும் ஒன்றியணைய வேண்டும் என 'டெய்லி டெலிகிராப்' பத்திரிக்கையில் லண்டன் முன்னாள் மேயரும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லவேண்டும் என்ற தரப்புக்குத் தலைமை தாங்கியவருமான, போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் அச்சம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஒற்றைச் சந்தையை தொடர்ந்து அணுக முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்துறை செயலாளர் தெரெசா மே, மற்றும் வேறு சிலரும், பிரதமர் பதவிக்குப் போட்டியிடத் தயார் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின், நிழல் அமைச்சரவையில் கிளர்ச்சியை முறியடித்துள்ளர். மீண்டும் கட்சியில் தலைமைப் பதவிக்குத் தேர்தல் நடந்தால் தான் போட்டியிடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.