சரியும் ஸ்டெர்லிங் பவுண்ட்; சமாளிக்க முடியுமா பிரிட்டனால்?

சரியும் ஸ்டெர்லிங் பவுண்ட்; சமாளிக்க முடியுமா பிரிட்டனால்?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய ராஜ்ஜியம் வெளியேறும் முடிவின் முதல் பின் விளைவு அதன் பொருளாதாரத்தில் வெளிப்படத் துவங்கியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது என்று வாதிட்டவர்களில் ஒருவர் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன்.

வாக்கெடுப்பின் முடிவுக்குப் பின் முதல் முறையாக அவர் திங்களன்று வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். எதிர்பாராத முடிவை எதிர்கொள்ள பிரிட்டன் தயாராக இருந்தது என்றார் அவர். அதேசமயம் பொருளாதாரத்தில் ஓரளவு தாக்கம் இருக்கும் என்றும் கூறினார்.

கருத்தறியும் வாக்கெடுப்புக்கு முன்பு அவர் எச்சரித்த பொருளாதார பெருங்குழப்பத்தை அவர் இப்போது எதிர்கொள்கிறார். சர்வதேச பொருளாதார சந்தைகளை சாந்தப்படுத்த முயல்கிறார்.

"பிரிட்டன் தற்போது சந்திக்கும் சவாலை எதிர்கொள்ளத் தேவையான எல்லா வலிமையும் அதன் பொருளாதாரத்துக்கு உண்டு. அந்த சவால் என்ன என்பது தெளிவாகிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகவேண்டுமென ஐக்கிய ராஜ்ஜிய மக்கள் வியாழனன்று வாக்களித்திருக்கிறார்கள். இந்த முடிவு நான் விரும்பிய முடிவல்ல. இதற்காக நான் பிரச்சாரம் செய்யவும் இல்லை. ஆனால் பெரும் அரசியல் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை அரசியல்வாதிகள் மட்டும் முடிவெடுக்கக் கூடாது; மக்களிடம் கருத்தறியப்படவேண்டும் என்று நாடாளுமன்றமே முடிவெடுத்தது”, என்றார் ஜார்ஜ் ஆஸ்போர்ன்.

வங்கிகளுக்கான நிதி தாராளமாக வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஸ்திரத்தன்மைக்கான தெளிவான திட்டம் ஏற்கனவே தீட்டப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் வலியுறுத்த விரும்பினார்.

ஆனால் பிரிட்டன் அரசியலை மூழகடித்துக்கொண்டிருக்கும் அரசியல் பிரளயத்திற்கு மத்தியில் இவரது அமைதிப்படுத்தும், உறுதி வழங்கும் வார்த்தைகள் அதிக கவனம் பெருவதாக தெரியவில்லை.

டேவிட் கேமரனின் பதவி விலகலைத் தொடர்ந்து அவர் இடத்துக்கு வரப்போகும் அடுத்த பிரதமர் யார் என்று இன்னமும் தெரியவில்லை. அவர் தான் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் நடைமுறை விவரங்களை வடிவமைக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவரோ அவரது மூத்த சகாக்கள் பலரின் ஆதரவை இழந்துவிட்டார்.

இந்த சூழலில் அடுத்து பொதுத்தேர்தல் நடக்கலாம் என்பதால் அது உருவாக்கும் நிச்சயமற்றத் தன்மையை நினைத்து சந்தைகள் மேலும் கவலைப்படுகின்றன.

இன்று காலை பிரிட்டிஷ் நாணயமான ஸ்டெர்லிங்க் பவுண்டின் மதிப்பு ஓரளவு ஸ்திரமடைந்தாலும், வெள்ளிக்கிழமை துவங்கிய அதன் வீழ்ச்சி இன்றும் தொடர்கிறது.

பிரிட்டிஷ் நிறுவன பங்குகளின் மதிப்பும் தொடர்ந்து சரிகிறது. முதலீடு குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.

இந்த முடிவு மக்களை பிளவுபடுத்தியிருப்பதோடு வீட்டுக்கடன் மீதான வட்டி விகிதம் குறித்தும், வீடுகளின் விலைகள் குறித்தும், வேலைகள் குறித்தும் அவர்களின் கவலைகளை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலான ஐக்கிய ராஜ்ஜியம் எப்படி இருக்கும் என்பதே மக்கள் மனதில் இருக்கும் முக்கிய கேள்வி.