பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை புறந்தள்ளிவிடக்கூடாது: டேவிட் கேமரன்

ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிட்டன் மக்கள் முழுமையாகப் புறந்தள்ளிவிடக்கூடாது என பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளர்.

படத்தின் காப்புரிமை EPA

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று வாக்களித்த பிறகு, முதன்முறையாக ஐரோப்பிய தலைவர்களைச் சந்திப்பதற்கான கூட்டத்திற்காக, பிரஸ்ஸல்ஸ் வந்தடைந்த கேமரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை, முடிந்தவரையில் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு உடனடியாக விலகும் நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் தீர்மானத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகளை தொடங்குவதில் நிலையற்ற தன்மையை நிறுத்த வேண்டும் எனவும் அதில் கண்ணாமூச்சி விளையாட்டு வேண்டாம் எனவும் ஐரோப்பிய ஆணைய அதிபர், ஜீன் க்லவுட் ஜன்கர் தெரிவித்துள்ளார்.