பிரிட்டனில் பொருளாதாரச் சரிவு ஏற்படும்: நிதியமைச்சர் எச்சரிக்கை

கடந்த வாரம் நடந்த ஐரோப்பிய ஒன்றிய கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவைத் தொடர்ந்து, பிரிட்டன் ஏழ்மைநிலைக்கு தள்ளப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதால் பொருளாதாரச் சரிவு ஏற்படும் என பிரிட்டன் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.

புதிதாக வரும் கன்செர்வேடிவ் அரசாங்கம், சில மாதங்களுக்குள், வரிகளை உயர்த்த வேண்டும் மற்றும் செலவினக் குறைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

டேவிட் கேமரன் பதவி விலகுவது என முடிவெடுத்ததைத் தொடர்ந்து நாட்டில் அச்சமயம் புதிய பிரதமர் பதவியேற்றிருப்பார்.

பிரதமர் பதவிக்கு தான் தான் போட்டியிடப் போவதில்லை என ஆஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் தெரேசா மே மற்றும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவளித்த போரிஸ் ஜான்சன் ஆகியோர் போட்டியாளர்களாக எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

சுகாதார அமைச்சர் ஜெரிமி ஹண்ட், தான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

அவர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகத் தேவையான நிபந்தனைகள் குறித்து இரண்டாம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார் ஆனால் அடுத்த தேர்தல் நடப்பதற்கு சற்று முன்னர் வரை அது தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.