அமெரிக்காவில் கொலைக்கு சாட்சியம் கிளியா?

  • 28 ஜூன் 2016

கொலை வழக்கு ஒன்றில் பேசும் கிளியை சாட்சியாக பயன்படுத்த முடியுமா என்று அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ஒரு அரசு தரப்பு வழக்கறிஞர் கருதி வருகிறார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption பட் என்ற பேசும் கிளி

கிளெனா துரம் (48) தனது கணவர் மார்டினை அவர்களின் செல்லப் பிராணியான கிளியின் கண்ணெதிரே 2015ல் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

'ஆப்பிரிகன் கிரே' என்று வகையை சேர்ந்த 'பட்'(Bud) என்ற பெயரில் அழைக்கப்படும் கிளி, மார்ட்டின் மற்றும் துரம் இருவரும் இறுதியாக சண்டையிட்டு விவாதம் செய்து கொண்டதை கேட்டது. தற்போது அவர்களின் இறுதி வார்த்தைகளை திரும்ப திரும்ப பேசுகிறது என்று இறந்த மார்டினின் உறவினர்கள் நம்புகிறார்கள்.

இந்த கிளியை சாட்சியாகப் பயன்படுத்த முடியுமா என்பது தெளிவாக இல்லை என்கிறார் உள்ளூர் அரசு தரப்பு வழக்கறிஞர்.

''கிளியை சாட்சியம் நம்பகமானதா அல்லது இந்த தகவல் எங்களுக்குப் பயன்படுமா என்பது குறித்து நாங்கள் தீர்மானிக்கப் போகிறோம் ,'' என்று நெவேகோ வட்டத்தின் அரசு தரப்பு வழக்கறிஞர் ராபட் ஸ்ப்ரிங்ஸ்டெட் ‘டெட்டிராய்ட் பிரீ ப்ரெஸ்’ என்ற பத்திரிகையிடம் கூறியுள்ளார்.

துரம் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்வதில் தோல்வி அடைந்ததற்கு முன்பு தனது கணவரை ஐந்து முறை சுட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை ABC

தற்போது துரம்மின் கணவர் மார்ட்டினின் முன்னாள் மனைவியான கிறிஸ்டினா கெல்லெரிடம் தான் அந்த கிளி உள்ளது. கொலை நடந்த இரவில் நிகழ்ந்த உரையாடலை அந்த கிளி மீண்டும் மீண்டும் சொல்வதாக அவர் நம்புகிறார்.

அந்த உரையாடலின் இறுதியில் 'டோன்ட் ஷூட்'(Don't shoot) ' சுட வேண்டாம்' என்று சொல்லப்பட்ட வார்த்தைகளையும், அதன் பிறகு சொல்லப்பட்ட வசவுச் சொல் ஒன்றையும் அந்தக் கிளி திரும்பத் திரும்ப சொல்வதாக கிறிஸ்டினா கெல்லெர் கூறியுள்ளார்.

மார்டினின் பெற்றோர்களும் இதை ஒப்புக்கொள்கிறார்கள்.

'கிளி சம்பவ இடத்தில் இருந்ததாக நான் எண்ணுகிறேன். அது அந்த வார்த்தைகளை நினைவில் வைத்துள்ளது. மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை கூறுகிறது,'' என்று ,மார்டினின் தந்தை உள்ளூர் ஊடகத்தில் கூறியுள்ளார்.

மார்டினின் தாயார் லில்லியன் துரம், ''அந்த பறவை எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்கிறது, மேலும் அது மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது'' என்றார்.

வழக்கு விசாரணையின் போது கிளி சாட்சியம் சொல்ல அழைக்கப்படுவது சாத்தியமில்லை என்றார் ஸ்பிரிங்ஸ்டெட்.