டென்னிஸ் வெற்றிக்குக் காரணம் ஆட்டத்திறனா, கட்டுடலா ?
உடற்பயிற்சிக் கூடத்தில் கடுமையாக பயிற்சி செய்வது ஒரு விம்பிள்டன் போட்டி வெற்றியில் குறைந்த அளவு பங்காவது வகிக்கிறது என்று பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நவீன காலத்தில், வெற்றிகரமான மற்றும் சிறந்த ஆடவர் டென்னிஸ் வீரர்கள் உடல்தசை மிக்கவர்களாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளில், மெலிந்த மற்றும் உடல் உறுதி மிக்கவர்களாக இருந்த டென்னிஸ் விளையாட்டின் ஆண்கள் பிரிவு சாம்பியன்கள், வலுவுள்ள உடல்தசை பயிற்சி பிரியர்களாக வடிவம் எடுத்திருப்பதாக, வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழக இரு நபர் ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
வலிமையான டென்னிஸ் ஷாட்களை விளையாட திரளான உடலமைப்பு ஒரு கூடுதல் வாய்ப்பினை தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விம்பிள்டன் கோப்பையை மீண்டும் ஆண்டி ரோடிக் வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளதாக, இந்த ஆராய்ச்சி பரிந்துரைத்துள்ளது. அதே போல், நோவாக் ஜோகோவிச்சுக்கும் நல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் உடலமைப்பு குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் புதிய பாணி:-1982 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் யு.எஸ். ஓபன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை உற்று நோக்கிய ஆராய்ச்சியாளர்கள், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்களில் விளையாடிய ஆடவர் டென்னிஸ் வீரர்களிடையே ஒரு புதிய பாணி உருவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, கனமான சரீரம் கொண்டவர்களாகவும் மற்றும் கட்டுமஸ்தான வீரர்களாக மாறிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வீரர்களின் வெற்றி வாய்ப்பினை அதிகரிக்கும் கட்டுமஸ்தான உடல்:-அதிகளவில் சதைப்பிடிப்பான வீரர்களால், தங்களின் வெற்றி வாய்ப்பினை அதிகரிக்க இயல்கிறது.
வெற்றிகரமான டென்னிஸ் வீரர்களை குறைந்தளவு வெற்றி பெறும் வீரர்களுடன் ஒப்பிடுகையில், முந்தைய வீரர்களிடையே குறிப்பிடத்தக்க வகையில் சதைப்பிடிப்பு அதிகரித்துள்ளதை, ஆராய்ச்சியாளர்களான பேராசிரியர் ஆலன் நெவில் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஆடம் கேல்-வாட் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.
1980-களில் ஆரம்பித்த இந்த உடல் தசை அதிகரிப்பு, 1990-களில் வேகம் பெற்று, 2009 காலகட்டத்தின் போது உச்சத்தை எட்டியுள்ளது. 2009-ஆம் ஆண்டில், ஸ்காட் வீரரான ஆண்டி மர்ரி உலகின் இராண்டாம் நிலை வீராக இருந்தார்.
இதே காலத்தில், வீரர்களின் மெலிவான உடல்வாகு என்ற அம்சம் சரிந்துள்ளதாக யுரோப்பியன் ஜானல் ஆ ஃப் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் (European Journal of Sports Science) என்ற இதழில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேராசிரியர் நெவில் கூறுகையில், ''நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, டென்னிஸ் வீரர்கள் மிகவும் மெலிந்த உடல்வாகு கொண்டவர்களாக இருந்தார்கள்.
ஆனால், தற்போது அவர்கள் சதைப்பிடிப்பு அதிகமுள்ளவர்களாக காணப்படுகிறார்கள்.
17 வயதில் ஆண்டி மர்ரியை நாம் பார்க்கும் போது, அவர் மிகவும் மெலிவான தேகம் கொண்டிருந்தார்.
அதன் பின்னர், தனது உடல் தசைகளை அவர் அதிகரித்துக் கொண்டார். கடந்த 4 முதல் 5 வருடங்களாக அவர் ஈட்டி வரும் வெற்றியின் ரகசியம் இது தான் என்று நான் நினைக்கிறேன்.'' என்று தெரிவித்தார்.
அதிகளவிலான தசைப்பிடிப்பு மற்றும் குறைந்தளவிலான உடல் கொழுப்பு ஆகிய அம்சங்கள், வீரர்களுக்கு ஆடு களத்தில் கூடுதல் அனுகூலத்தை தருகிறது என்று நெவில் தெரிவித்தார்.
இதன் மூலம், வீரர்களுக்கு டென்னிஸ் கோர்ட்டில் மிகவும் விரைவாக மற்றும் சுறுசுறுப்பாக செயல்படவும், தங்களின் டென்னிஸ் ஷாட்களில் கூடுதல் பலத்தையும் உருவாக்க முடிகிறது.
அதீத உடற்பயிற்சி காயங்களுக்கு வழிவகுக்கலாம்:-உடற்பயிற்சி கூடம் மற்றும் டென்னிஸ் ஆடுகளத்தில் நீண்ட நேரம் செலவழிப்பது காயங்கள் உண்டாக வழிவகை செய்துவிடும் என்றும் நெவில் மேலும் கூறினார்.
மகளிர் டென்னிஸ் வீரர்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யாத போதிலும், மகளிரைப் பொருத்த வரை, அவர்களின் ஆட்டம் ஆடவர் டென்னிஸில் இருந்து மாறுபட்டது என்று பேராசிரியர் நெவில் தெரிவித்தார்.
மகளிர் டென்னிஸ் குறித்து நெவில் கருத்து தெரிவிக்கையில், ''செரீனா வில்லியம்ஸ் மிகவும் உடல் வலுமிக்க ஒரு பெண். அவருடன் பல பெண்கள் தாக்குப் பிடிக்க முடியாததற்கு காரணம் அதீத உடல் வலு தான்.
திறமை மற்றும் ஆற்றல் இடையே ஒரு சமநிலை மகளிர் டென்னிஸ் பிரிவில் உள்ளது. மகளிர் டென்னிஸ் பிரிவில் திறன் காரணி சற்றே கூடுதலாக வெற்றியை தீர்மானிக்கும்.'' என்று தெரிவித்தார்.
அதே போல், மற்ற விளையாட்டுகளிலும் வெற்றி பெற உதவும் சரியான உடலமைப்பு எது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
விரைவு ஓட்டம் மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் மெலிவான தேகம் கொண்டவர்களால் வெற்றி வாகை சூட முடிகிறது.