நைஜீரியாவில் அரசியல்வாதிகளை பற்றிப் பாடியதால் காணமல் போன பாடகர்

வடகிழக்கு நைஜீரியாவில், கடந்த வெள்ளிக்கிழமையன்று காணாமல் போன அடு டவ்காகா என்னும் புகழ்பெற்ற பாடகரை போலிஸார் தேடி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Courtesy Daukaka family

அரசியல்வாதிகளின் திறமையின்மை மற்றும் ஊழலை எடுத்துக் காட்டும் ஒரு பாடலை வெளியிட்டதற்கு பிறகு அவர் இவ்வாறு காணமல் போயுள்ளார்.

"சரியான செயலைச் செய்வோம் வாருங்கள்" என்ற அர்த்தத்தில் க்யாரா கயன்கா என்று தொடங்கும் அந்த ஹாசா மொழிப் பாடலில், அரசியல்வாதிகள் எவ்வாறு வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் உள்ளனர் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

அவர் மனைவிகளில் ஒருவரான ஹடிசா டவ்டா, வெள்ளிக்கிழமை அதிகாலை முகம் தெரியாத சில நபர்கள் டவ்காகாவை சந்தித்ததாகவும் அதுவே அவரின் குடும்பத்தினர் அவரை கடைசியாக பார்த்த தருணம் எனவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அவரின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என அவரின் குடும்பத்தினர் அஞ்சுவதாக கண்ணீர் மல்க அவர் கூறியுள்ளார்.