ஆப்கன் தற்கொலை குண்டு தாக்குதலில் 30 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் புறநகர் பகுதியில்போலிஸ் வாகன அணிவகுப்பு மீது தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 30 போலிசார் மற்றும் பொதுமக்கள்

கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Image caption தாக்குதல் நடந்த இடம்

காபூலின் மேற்குப் புறநகர் பகுதியில் பட்டமளிப்பு விழா முடிந்து திரும்பிக் கொண்டிருந்த காவல்துறை பட்டதாரிகளின் வாகனங்கள் மீது இரண்டு குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதுபற்றி, பிபிசியிடம் தகவல் தெரிவித்த பாகம் மாவட்ட ஆளுநர் ஹாஜி முகமது மூஸா கான், இச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் போலிசார் என்றும், தெருவோரம்

பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணும், குழந்தையும் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Image caption பலியானவர்களில் பெரும்பாலோர் போலிஸ் பயிற்சி பெறுவோர்.

இச் சம்பவத்தில் 50 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பினர் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

இதுகுறித்து, தாலிபான் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், போலீசார் வந்த ஒரு பஸ்ஸை முதல் குண்டுதாரி தாக்கியதாகவும், சம்பவம் நடந்த பிறகு மீட்புப் படையினர் அங்கு வரத்துவங்கியதும் வெடிபொருள்கள் ஏற்றப்பட்ட காரை வாகனங்களின் மீது மோதியதாகவும் தெரிவித்தார்.

கடந்த வாரம், பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில், கனடா தூதரகத்துக்காகப் பணியாற்றும் பாதுகாவலர்களும் அடங்குவார்கள்.