பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் மைக்கேல் கோவின் தேர்தல் கொள்கை வெளியீடு

  • 1 ஜூலை 2016

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டுமென்று பரப்புரை செய்த தலைவர்களில் ஒருவரான மைக்கேல் கோவ், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்தத் தலைவராகவும், பிரதமராகவும் வருவதற்கு போட்டியிடப் போகும் நிலையில், தனது தேர்தலுக்கான தனது கொள்கைத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

இதுவே சரியான செயல்பாடு என்பதால் போட்டியிடப் போவதாக கூறியுள்ள மைக்கேல் கோவ், இதே காரணத்திற்காக தான் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகின்ற கட்டுப்பாடற்ற குடியேற்றத்தை முடிவுக்கு கொண்டுவர அவர் உறுதியளித்துள்ளார்.

பெரிய வர்த்தகத்திற்கும், அதிக ஊதியம் பெறும் செயலதிகாரிகளுக்கும் மட்டுமே உதவி செய்யாத வகையில், பிரிட்டனின் பொருளாதார அமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டுவர வழிகளை ஆராய்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

உள்துறை அமைச்சர் தெரஸா மே உள்பட பல கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மைக்கேல் கோவ் போட்டியிடுகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதையே விரும்பிய தெரஸா மே, வெற்றி பெறக்கூடிய வேட்பாளராகக் கருதப்படுகிறார்.

கட்சி முழுவதும் ஒன்றாகி தெரஸா மேவை தேர்தெடுக்கும் விதமாக, மைக்கேல் கோவ் தலைமைக்காக போட்டியிடுவதைக் கைவிட கன்சர்வேட்டிவ் கட்சியின் சில மூத்தத் தலைவர்கள் முயல்வதாக பிபிசியின் அரசியல் விவகாரச் செய்தி ஆசிரியர் தெரிவிக்கிறார்.