பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியின் முன்னணியில் தெரஸா மே

பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், அடுத்த பிரதமராகவும் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு, பெரும்பான்மை அமைச்சரவை சகாக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார் உள்துறை அமைச்சர் தெரஸா மே.

படத்தின் காப்புரிமை PA
Image caption மைக்கேல் கோவ் மற்றும் தெரஸா மே

அவருக்கு எழுபதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. போட்டியாளர்களில், அவருக்கான வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

அவரது பிரதான போட்டியாளராகக் கருதப்படுபவர், மைக்கேல் கோவ். தானும் தலைமைப் பதவிக்குப் போட்டியிடப்போவதாக வியாழக்கிழமை அவர் அறிவித்தார். இதனால், தலைமைப் பதவிக்கான போட்டியில் களமிறங்கத் திட்டமிட்டிருந்த லண்டனின் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன், தான் போட்டியிடப் போவதில்லை என்று விலகிக் கொண்டார். இதையடுத்து, இந்தப் போட்டியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மைக்கேல் கோவ் வெள்ளிக்கிழமையன்று, தனது பிரசாரத்தைத் துவக்குவார் என்றும், தனது இலக்கு என்ன என்பதை அவர் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்கக் கூடாது என்று மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை மக்கள் தீர்மானித்ததை அடுத்து, தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக டேவிட் கேமரன் அறிவித்ததை அடுத்து, தலைமைப் பதவிக்குப் போட்டி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.