ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐஎஸ்ஸிடமிருந்து மகனை மீட்கச்சென்ற தந்தை "ஐஎஸ் தாக்குதலில்" பலி

துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.

இங்கு நடந்த தற்கொலைத்தாக்குதலில் நாற்பது பேர் கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. சிதைந்த பகுதிகள் சீரமைக்கப்படுகின்றன.

இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பில் சேர்ந்த தன் மகனை மீட்க துருக்கிக்கு சென்ற துனிஷிய இராணுவ மருத்துவரும் இங்கே கொல்லப்பட்டார். அவரது சடலமும் தற்போது நாடு திரும்பியது.

பிரிகேடியர் ஃபதி பயுத், துனிஷியாவின் இராணுவ மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியவர்.

நன்கு மதிக்கப்பட்ட பணியாளர், இனிய தோழர் என்கிறார்கள் அவரது நண்பர்கள். ஆனால் கடந்த மூன்று மாதங்கள் துருக்கியில் அவர் ஒரு அலைக்கழிக்கப்பட்ட அப்பாவாக அல்லாடினார். இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பில் சேர்ந்த தன் ஒரே மகனை மீட்பதற்காக.

துனிஷியாவிலிருந்து வரும் தன் மனைவியை அழைத்துச் செல்ல Ataturk விமான நிலையம் வந்தவர் அங்கேயே கொல்லப்பட்டார்.

அங்கு நடந்த தற்கொலைத்தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடுகளை இஸ்லாமிய அரசு அமைப்பினரே செய்ததாக துருக்கிய அதிகாரிகள் நம்புகிறார்கள்.

இந்த பிராந்தியத்திலேயே இராக்குக்கும் சிரியாவுக்கும் அதிகமான ஜிகாதிகளை அனுப்பும் நாடு துனிஷியா. ஐஎஸ் அமைப்பின் விரிவாக்கத்துக்கு உதவும் நாடாக மட்டும் துனிஷியா இருக்கவில்லை, அதனால் பாதிக்கப்படும் நாடாகவும் இருக்கிறது.

25 வயது அன்வர் பயுத் ஏழைக்குடும்பத்திலிருந்து வரவில்லை. மிகப்பெரிய படிப்பாளி. அமைதியான இளைஞன். நவம்பர் மாதம் ஐ எஸ் அமைப்பில் சேர்ந்தார்.

என்ன நடந்தது என்பது குறித்து பிபிசியிடம் பேசிய அன்வர் பயுத்தின் குடும்ப நண்பர் ஹசன் ஸ்லமா, "இந்த ஐஸ் அமைப்பு என்பதெல்லாம் மிகப்பெரிய கேலிக்கூத்து. பொய்த்தோற்றம் என்று அன்வர் தன் தந்தையிடம் தெரிவித்திருந்தான். தனக்கு உதவ முடிந்தால் உதவும்படி தந்தையிடம் அவன் கோரியிருந்தான். அப்படி உதவுவதற்காகவே தந்தையான இவர் அங்கே போனார். அதில் வெற்றியும் பெற்றார். தன் மகன் துருக்கியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். நீ அவனைப்பார்த்தாயா என்றேன். இல்லை என்றவர் இனி பயமில்லை விரைவில் அவனை சந்திப்பேன் என்றார்”.

ஆனால் மகிழ்ச்சியான அந்த தந்தைக்கு விரைவில் என்கிற நாள் வரவே இல்லை.

எச்சரிக்கை: இந்த காணொளியில் வரும் சில காட்சிகள் சிலருக்கு மனசஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடும்.