பிரான்சில் சௌதிக்கு சொந்தமான மசூதி திறப்பு

  • 3 ஜூலை 2016

சௌதி அரேபியாவுக்கு சொந்தமான மசூதி ஒன்று, பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள நீஸ் நகரில் திறக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption பிரான்ஸின் நீஸ் நகரில் சௌதி அரேபியாவுக்கு சொந்தமான மசூதி திறப்பு ( படத்தில் பாரிஸில் உள்ள பெரிய மசூதி- ஆவணப்படம்)

பல ஆண்டுகளாக இந்த மசூதி திறக்கப்படுவதற்கு அதிகார வட்டாரங்களில் எதிர்ப்பு நிலவியது.

நீஸ் நகர மேயர் பிலிப் ப்ரதால் இந்த மசூதி திறக்கப்பட ஒப்புதல் அளிக்க மறுத்ததன் பின்னர், அப்பகுதியின் பிராந்திய நிர்வாகி, அதற்கு ஒப்புதல் வழங்கினார்.

ப்ரதாலுக்கு முன்னர் மேயராக இருந்த கிறிஸ்டியன் எஸ்ட்ரோஸி , இந்த மசூதிக்கு சொந்தக்காரரான, சௌதி இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சர், ஷேக் சலே பின் அப்துல் அஸிஸை, ஷாரியா சட்டத்தை பரப்புவதாகவும், அரேபிய வளைகுடாவில் உள்ள எல்லா கிறித்தவ தேவாலயங்களையும் அழிக்க விரும்புவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் நீஸ் நகர கவுன்சில் இந்த மசூதிக்கு அனுமதி வழங்க மறுப்பதன் மூலம், பிரான்சின் அரசியல் சட்டத்தில் மத சுதந்திரத்துக்குத் தரப்பட்ட உத்தரவாதங்களை உடைப்பதாக நாட்டின் அதி உயர் நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.