பெடரல் புலனாய்வு துறை விசாரணை பற்றி ஹிலாரி தகவல்

  • 3 ஜூலை 2016

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், தான் வெளியுறவு செயலராக இருந்தபோது தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையகம் ஒன்றை பயன்படுத்தியது தொடர்பாக பெடரல் புலனாய்வு துறை விசாரித்ததை பற்றி பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க பெடரல் புலனாய்வு துறை விசாரணை சுமுகமானதாகவும் அலுவல் ரீதியிலும் இருந்தது - ஹிலாரி

சுமுகமானதாகவும், அலுவல் ரீதியிலும் அந்த சந்திப்பு இருந்தது என்று என்பிசி தொலைக்காட்சியில் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஓராண்டு காலம் நடைபெற்ற மீளாய்வை முடிவுக்கு கொண்டுவர நீதித் துறைக்கு உதவக் கிடைத்த வாயப்புக்கு தான் பெருமைப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.

தான் எந்த தவறையும் இழைக்கவில்லை என்றும், வகைப்படுத்தப்பட்டது என குறிக்கப்பட்ட எவற்றையும் அந்த தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையகம் மூலம் அனுப்பவோ, பெற்றுக்கொள்ளவோ இல்லை என்று ஹிலாரி கூறிவருகிறார்.

ஆனால் எதிராளிகளோ, அவர் பல நூறு வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை பொது இணையவெளியில் அவர் போட்டிருக்கலாம் என்கின்றனர்.

ஹிலாரி தண்டனை பெற போவதில்லை என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சியின் மாநாடு நடைபெறுவதற்கு சில வாரங்களே இருக்கின்ற நிலையில், இந்த விசாரணை நடைபெற்றுள்ள நேரம் தான் சிக்கலானது என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.