ஆஸ்திரேலிய பிரதமர் பதவி விலக பில் ஷோர்டன் கோரிக்கை

கடந்த சனிக்கிழமை ஆஸ்திரேலியாவில் நடந்த தேர்தல் நடவடிக்கைகள் முற்றுப்பெறாமல், இன்னமும் தேர்தல் முடிவுகளுக்கு மக்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் பில் ஷோர்டன், ஆஸ்திரேலிய பிரதமர் பதவி விலக வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption தொழிலாளர் கட்சியின் தலைவர் பில் ஷோர்டன்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் முடிவெடுத்த பிறகு உலகளவில் ஏற்பட்ட நிச்சயமின்மைக்கு மத்தியில், தனது கூட்டணி அரசை மீண்டும் தேர்ந்தெடுத்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பர் என்று வாக்காளர்களுக்கு உறுதியளித்தற்காக பிரதமர் மால்கம் டர்ன்புல்லை பில் ஷோர்டன் பரிகசித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான கருத்தறியும் வாக்கெடுப்பில் டேவிட் கேமரன் தோல்வியுற்றதை போல, ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகளில் டர்ன்புல் தோல்வி முகத்தில் உள்ளார் என்று குறிப்பிடுவது போல அவரை 'தென் துருவத்தின் டேவிட் கேமரன்' என்று பில் ஷோர்டன் அழைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைவதற்கான நிச்சயமான சாத்தியக்கூறு உள்ளது.