ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுமுன் நாடாளுமன்ற ஒப்புதல் கோரி பிரிட்டிஷ் அரசுக்கு நோட்டிஸ்

  • 4 ஜூலை 2016

பிரிட்டன் , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் வழிமுறையை, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தொடங்கமாட்டோம் என்ற உறுதிமொழிகளை பிரிட்டிஷ் அரசிடம் கோரி கடிதம் எழுதியுள்ளதாக, லண்டனிலிருந்து செயல்படும் சட்ட நிறுவனம் ஒன்று கூறுகிறது.

படத்தின் காப்புரிமை

அத்தகைய ஒரு நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்று நோட்டிஸ் கொடுப்பது சட்டபூர்வமற்றதாக இருக்கும் என்றும் அத்தகைய முடிவு சட்டச்சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் என்றும், மிஷ்கான் தெ ரேயா என்ற இந்த நிறுவனம் கூறுகிறது.

அது பெயர் குறிப்பிடப்படாத வர்த்தகர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய ஒரு சிறு குழுவின் சார்பாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption விலகுமுன் நாடாளுமன்ற அனுமதி தேவை என்கிறது சட்ட நிறுவனம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த நடவடிக்கையைத் தடுக்க ஒரு வாய்ப்பை இந்த நடவடிக்கை தருகிறது என்றும், ஆனால் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவைப் புறக்கணிப்பது என்பது அரசியல் ரீதியாகவும் , அரசியல் சட்டப்படியும் நினைத்துப்பார்க்க இயலாத ஒன்றாக இருக்கும் என்றும் பிபிசியின் சட்டவிவகாரச் செய்தியாளர் கூறுகிறார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருப்பது என்ற நிலை, உள்நாட்டு சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது என்றும், அதை வேறொரு சட்டத்தால் மட்டுமே மாற்ற முடியும் என்றும், பிரதமரின் ஒரு நிர்வாக உத்தரவால் மாற்ற முடியாது என்றும் இந்தக் குழு வாதிடுகிறது.