இராக் போர்: " நாட்டின் நலன்களை மனதில் கொண்டே முடிவு எடுத்தேன், முழுப் பொறுப்பை ஏற்கிறேன்" - பிளேர்

  • 6 ஜூலை 2016

பிரிட்டன் இராக் போரில் ஈடுபட்டது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட சில்காட் குழு அறிக்கை குறித்து தனது கருத்தை வெளியிட்ட முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், எந்தவொரு விதிவிலக்கு அல்லது சாக்குப்போக்கோ இல்லாமல், தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption "முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன்" - டோனி பிளேர்

மேலும் அவர் கூறுகையில், சதாம் ஹுசைனை விலக்குவது தான் சிறந்தது என்று நம்பியதாகத் தெரிவித்தார். "தற்போது மத்திய கிழக்கு அல்லது உலகின் பிற பகுதிகளில் நடக்கும் தீவிரவாததிற்கு இந்த விவகாரம் காரணம் என்று நான் நம்பவில்லை,'' என்றார் பிளேர்.

மேலும் அவர், ''எல்லாவற்றுக்கும் மேலாக, நான் நமது ராணுவ படையினருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இறந்தவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எதிர்காலத் தலைவர்கள் எனது அனுபவத்தில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள்,'' என்றார்.

சில்காட் விசாரணை முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ,ராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற தனது முடிவு குறித்து, யாரும் உடன்பட்டாலும், உடன்படாவிட்டாலும், அந்த முடிவ தான் நாட்டின் நலன்களை மனதில் வைத்து எடுத்ததாகவே தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

"எதிர்காலப் பாடங்கள் கற்றுக்கொள்ளப்படவேண்டும்"

சில்காட் குழுவின் அறிக்கையில்,டோனி பிளேர் , பிரிட்டனின் கூட்டாளியான அமெரிக்காவுடன் தோளோடு தோள் நிற்கத்தான் இராக்கில் போருக்குச் சென்றார், ஆனால் அமெரிக்காவின் திட்டங்கள் பற்றி அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் அவர் வற்புறுத்திக் கேட்டுத் தெளிவு பெறவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் டேவிட் கேமரன், எதிர்காலத்துக்கான பாடங்கள் கற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றார். இராக் போருக்கு ஆதரவாக வாக்களித்த அனைவரும் தங்கள் பங்கு பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் கேமரன்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இராக் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிளேருக்கு எதிரான பதாகைகளை தாங்கி வருகின்றனர்
பிளேர் மீது மக்கள் கோபம்

ஆனால், இராக் போரில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் ராணுவத்தினர் சிலரது குடும்பத்தினர் பிளேர் எடுத்த முடிவு குறித்து தங்கள் சினத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

போரில் கொல்லப்பட்ட ஒரு சிப்பாயின் சகோதரி பிளேரை ஒரு பயங்கரவாதி என்று வர்ணித்தார்.

வேறு பலர், பிளேர் தங்களை நேருக்கு நேர் பார்த்து ஏன் நாட்டை தவறாக வழிநடத்தினார் என்று விளக்கவேண்டும் என்று கூறினர்.