குறைபாடுடைய உளவுத் தகவலின் அடிப்படையில் இராக் போர் - சில்காட் அறிக்கை

அமெரிக்கா தலைமையில் இராக் மீது நடத்தப்பட்ட 2003ம் ஆண்டு படையெடுப்பு தவிர்க்கமுடியாத கடைசி நடவடிக்கை அல்ல என்று இராக் போரில் பிரிட்டனின் ஈடுபாடு குறித்து நடத்தப்பட்ட சில்காட் விசாரணை அறிக்கை முடிவு செய்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption குறைபாடுடைய உளவுத் தகவலின் பேரில் இராக் போர் நடத்தப்பட்டது - சில்காட் அறிக்கை ( படத்தில் விசாரணைக் குழு தலைவர் சர் ஜான் சில்காட்)

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த இந்த அறிக்கையை வெளியிட்ட , அந்த விசாரணைக் குழுவின் தலைவர் சர் ஜான் சில்காட், இராக் தொடர்பான் பிரிட்டிஷ் கொள்கை குறைபாடுடைய உளவுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது , இராக் குறித்த கணிப்பீடுகள் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கவேண்டும் ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை என்று தெளிவாகிறது என்று கூறினார்.

இராக் பிரிட்டிஷ் நலன்களுக்கு ஒரு உடனடி அச்சுறுத்தலாக விளங்கவில்லை என்றும், இராக் வைத்திருந்ததாகக் கருதப்பட்ட பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள் தோற்றுவித்த ஆபத்து பற்றிய மதிப்பீடுகள் நியாயமற்ற ஒரு நிச்சயத்தன்மையுடன் முன்வைக்கப்பட்டன என்று சில்காட் கூறினார்.

இந்தப் படையெடுப்பின் விளைவுகள் குறைத்து மதிப்பிடப்பட்டன என்றும் , படையெடுப்பிற்கு பின்னர் ஏற்படக்கூடிய நிலையை எதிர்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் மிகவும் போதாத அளவு மோசமாக இருந்தன என்றும் கூறினார் சில்காட்.

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் இராக் மீது படையெடுக்க பிரிட்டிஷ் படைகளை ஈடுபடுத்தியது கடந்த 50 ஆண்டுகளில் பிரிட்டன் எடுத்த மிகவும் சர்ச்சைக்குரிய வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் ஒன்றாகும். இந்த படையெடுப்பை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரித்திருந்தது.