கன்சர்வேடிவ் கட்சித் தேர்தல்: முதல் சுற்றில் வென்றார் தெரெசா மே

பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு நடக்கும் தேர்தலின் முதல் சுற்றில், உள்துறை அமைச்சர் தெரெசா மே, தெளிவான பெரும்பான்மையுடன் வென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption முதல் சுற்றில் வென்றார் தெரெசா மே

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் அமைந்ததை அடுத்து, பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகவுள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சிப்பிரிவின் தலைவர் தேர்தல் நடக்கிறது.

ஒட்டுமொத்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவையும் பெறுபவராக தான் மட்டுமே இருப்பதை இந்தத் தேர்தல் முடிவு காட்டுவதாக தெரெசா மே கூறினார்.

மே அம்மையார், பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்க வேண்டும் என்ற நிலைப்பட்டை ஆதரித்தவர்.

அவருக்கு அடுத்தபடியாக வாக்குகளைப் பெற்ற ஆண்ட்ரியா லீட்சம் அம்மையார், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகவேண்டும் என்ற தரப்பை ஆதரித்து பிரசாரம் செய்தவர்.

அடுத்த சுற்று வாக்குப்பதிவு வியாழனன்று நடக்கவிருக்கிறது.

இந்த சுற்றில் குறைந்த வாக்குகள் பெற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட லியாம் ஃபாக்ஸ் மற்றும் போட்டியிலிருந்து விலகிக்கொண்ட ஸ்டீபன் க்ராப் ஆகியோரை அடுத்து இப்போது போட்டியில் மூன்று பேர் எஞ்சியுள்ளனர்.