ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

2003 ஆம் ஆண்டின் இராக் ஆக்கிரமிப்பு "இஸ்லாமிய அரசை" உருவாக்கியதா?

  • 7 ஜூலை 2016

இராக் போரில் பிரிட்டனை இறக்கியதற்கான தனது முடிவு சரியென்று முன்னாள் பிரதமர் டொனி பிளயர் மீண்டும் வாதாடியுள்ளார்.

முன்னதாக நேற்று புதன்கிழமை, இதற்கான திட்டமிடல், போர் நடத்தப்பட்ட விதம் மற்றும் போருக்கு பின்னரான நிலை குறித்து சில்காட் அறிக்கை கடுமையாக விமர்சித்திருந்தது.

அதேவேளை, இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட பிரிட்டனில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், இராக்கில் 2003 ஆம் ஆண்டில் வெடித்த போர் இன்னமும் அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பாக்தாதிலும் இராக்கின் இதர பகுதிகளிலும் இன்னமும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

இலக்கற்ற திடீர் மரணம் நேரலாம் எனும் அச்சம் எங்கும் நிறைந்திருக்கிறது.

13 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப்படைகள் பாக்தாதை அடைந்ததை கொண்டாடும் விதமாக சதாம் உசைன் சிலையை ஒரு கூட்டம் அகற்றி குதூகலித்தது.

அந்த கூட்டத்தில் காதிம் அல்ஜப்ரியும் இருந்தார். அப்போது சுதந்திரம் பெற்றுவிட்டதாக அவர் நம்பினார். ஆனால் இன்று, பல இராக்கியர்களைப்போல சதாம் ஆட்சி கொடுங்கோன்மையாக இருந்தாலும், உறுதியான ஆட்சியாக இருந்தது என்கிறார்.

“ஒரு சதாம் போய்விட்டார். இன்று ஒராயிரம் சதாம்கள் இருக்கிறார்கள். டோனி பிளேர் மட்டும் என் முன் வந்தால் நீ ஒரு கிரிமினல் என்று சொல்லி முகத்திலேயே காறித்துப்புவேன்”, என்றார் காதிம் அல்ஜப்ரி.

மத்திய கிழக்கின் எல்லாவிதமான குழப்பங்கள், வன்முறைகள், போர்களுக்கும் 2003 ஆண்டைய ஆக்கிரமிப்பே மூலம் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலானவற்றுக்கு அதுவே துவக்கப்புள்ளி.

குளத்தில் மிகப்பெரிய பாறையை போடுவதைப்போன்ற செயல் அது. மிகப்பெரிய அதிர்வலைகளை அது உருவாக்கியது—புவிசார் அரசியலில், மத, இனப்பிளவுகளில், இராணுவ ரீதியில் 13 ஆண்டுகளுக்குப்பின்னும் அந்த அதிவலைகள் இந்த பிராந்தியத்தில் மோதிக்கொண்டே இருக்கின்றன.

உள்நாட்டு மோதல், பிராந்திய ஸ்திரமின்மை, ஜிகாதிகளின் உருவாக்கம் குறித்த எச்சரிக்கைகள் அனைத்தையும் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் புறந்தள்ளினார் என்கிறது சில்காட் அறிக்கை.

அந்த எச்சரிக்கைகள் அனைத்தும் அட்சரம் பிசகாமல் இன்று அப்படியே பலித்திருக்கின்றன.

இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் ஆயுததாரிகளில் முன்னாள் இராக் இராணுவ அதிகாரிகளும் அடக்கம். அமெரிக்காவும் பிரிட்டனும் இராக் இராணுவத்தை கலைத்த பின் அவர்கள் அங்கே போய் சேர்ந்தார்கள்.

இராக்கின் இன வன்முறை சிரியாவுக்கும், யெமெனுக்கும் வேறு பல நாடுகளுக்கும் பரவியது. ஷியா சுனி இடையிலான அச்சங்களை தமது அதிகார சண்டைக்கு பயன்படுத்திக்கொண்டனர் பல அரசியல் தலைவர்கள்.

2003ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புக்கு முன் ஜிகாதிகள் அங்கே தாக்கப்படுபவர்களாக இருந்தனர். ஆனால் ஆக்கிரமிப்புக்குப் பின் அல்குவைதாவின் சொர்க்கமாக, தலைமையகமாக இராக் மாறிப்போனது. அதைத்தான் இன்றும் இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பு பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.