கானாவில் ரமலான் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல்: 9 பேர் பலி

  • 7 ஜூலை 2016

இஸ்லாமியர்களின் புனித நோன்பு மாதமான ரமலான் பண்டிகையின் நிறைவை குறிக்கும் விதமாக கானாவில் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

கானாவின் மத்திய நகரமான குமாஸியில் நடைபெற்ற இந்த விபத்துக்கான ஆரம்பம் எது என்ற தகவல் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கூட்டத்தின் நடுவே மோதல் ஏற்பட்டதாகவும், மக்கள் அங்கிருந்து தப்ப முயற்சித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மின்சாரம் தடைப்பட்டதுடன் துப்பாக்கியில் இருந்து குண்டு ஒன்று வெளியேறியது போன்று எழுந்த அதிக சத்தத்தை தொடர்ந்து எழுந்த பீதி காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என மற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொல்லப்பட்டவர்களில் 6 பேர் பெண்கள், 3 ஆண்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.