அமெரிக்கா வன்முறை ; துப்பாக்கிச்சூட்டில் 5 போலிசார் பலி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லஸ் நகரில் போலிஸ் வன்முறைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் போலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து போலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை
Image caption உஷார் நிலையில் டல்லஸ் காவல்துறை

இச் சம்பவம் தொடர்பாக, ஒருவர் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இன்னொருவர் சரணடைந்தார்.

சரமாரியாக துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், ஆர்ப்பாட்டத்தில் சென்றவர்கள் பல்வேறு திசைகளில் சிதறி ஓடினார்கள்.

படத்தின் காப்புரிமை
Image caption தீவிர பாதுகாப்புப் பணியில் போலிஸ் அதிகாரிகள்

திடீர் தாக்குதல் பாணியில் போலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் மூன்று போலிசார் உடனடியாக இறந்துவிட்டதாகவும் டல்லாஸ் தலைமை போலிஸ் அதிகாரி டேவிட் பிரவுன் தெரிவித்தார். மேலும் இரு போலிஸ் அதிகாரிகள் பின்னர் உயிரிழந்தனர்.

படத்தின் காப்புரிமை
Image caption சோதனை நடடிக்கையில் போலிஸ் அதிகாரிகள்

தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள், திட்டமிட்டு, குறிபார்த்து தாக்குதல் நடத்த இரண்டு இடங்களில் காத்திருந்திருக்கலாம் என தாங்கள் நம்பவுதாகவும், அதிகபட்சம் அதிகாரிகளை கொன்று, காயப்படுத்த அவர்கள் திட்டமிட்டிருந்திருக்கலாம் எனவும் தலைமை போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

தாக்குதல் நடந்த இடத்தில் கிடந்த மர்ம பார்சல் ஒன்றை வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பதினொரு போலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சில அதிகாரிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டேவிட் பிரவுன் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் சிவிலியன் ஒருவரும் உள்ளார்

படத்தின் காப்புரிமை
Image caption டல்லஸ் போலிஸ் வெளியிட்ட சந்தேக நபரின் புகைப்படம்

மின்னெசோட்டா மற்றும் லூசியானா மாநிலங்களில் சமீப நாட்களில் போலிஸ் அலுவலர்களால் இரண்டு கறுப்பின இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிராக நாடெங்கிலும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த மரணத்தை விளைவித்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அனைத்து அமெரிக்கர்களையும் கவலையுறச் செய்யவேண்டும் என்றார்.

படத்தின் காப்புரிமை
Image caption காவல் துறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவின் கிரிமினல் நீதியமைப்பில் உள்ள காழ்ப்புணர்வுகள் களையப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மின்னெசோட்டா மாநிலத்தின் ஆளுநர் மார்க் டேய்ட்டன், ஃபிலேண்டோ காஸ்டில் என்ற கறுப்பின கார் ஓட்டுநர் சுட்டுக்கொல்லப்பட்ட சமீபத்திய சம்பவம், ஓட்டுநர் வெள்ளையினத்தவராக இருந்திருந்தால் நடந்திருக்காது என்று குறிப்பிட்டார்.