காஷ்மீரில் வன்முறை வெடித்தது: 8 பேர் சாவு

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில், தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவன் கொல்லப்பட்டதை அடுத்து, போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே சனிக்கிழமை ஏற்பட்ட கடும் மோதலில், ஆர்ப்பாட்டக்காரர்கள் 8 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எழுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காஷ்மீரின் புதிய தீவிரவாதத்தின் போஸ்டர் பாய் என்று அழைக்கப்படும், 21 வயதான புர்ஹான் வானி, ஸ்ரீநகருக்கு தெற்கே 45 மைல் தொலைவில் உள்ள அனந்த்நாக் பகுதியில் பதுங்கியிருந்தபோது, அதுகுறித்த பாதுகாப்புப் படையினருக்கு ரகசியல தகவல் கிடைத்ததது. அதைத் தொடர்ந்து நடந்த மோதலில் வெள்ளிக்கிழமை புர்ஹான் வானி கொல்லப்பட்டார்.

''முழுமையான தாக்குதல் நடவடிக்கையில், புர்ஹான் வானியுடன் மேலும் இருவர் கொல்லப்பட்டார்கள் '' என காவல் துறை தலைவர் கே. ரஜிந்தெரா தெரிவித்தார்.

கலவரம் பரவும் என்று எதிர்பார்ப்பதால், இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைகளை அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர். தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கியப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாத தலைவர்கள் போராட்டத்தில் பங்கெடுப்பதைத் தடுக்கும் வகையில், அவர்களது வீடுகளைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், கட்டுப்பாடுகளையும் மீறி ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தார்கள். மூன்றாவது இளைஞர், ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் விரட்டியபோது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினார்கள்.

படக்குறிப்பு,

புர்ஹான் வானி

இதனால், போலிசார் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் கடும் மோதலில் ஈடுபட்டார்கள். 12--க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்திருப்பதாக பல்வேறு மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஆயிரக்கணக்கானவர்கள், புர்ஹான் வானியின் சொந்த ஊரான ட்ராலுக்கு சென்றடைந்தனர். பெருமளவில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களுடன், அவரது இறுதி ஊர்வலத்தில் அவர்கள் பங்கேற்றனர்.

அந்தப் பகுதியில் இரண்டு காவல் நிலையங்களையும், ஒரு போலீஸ் சோதனைச் சாவடியையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்ற பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அங்கு சடலம் இல்லாத அஞ்சலி நிகழ்ச்சியில் அவர்கள் ஈடுபட்டார்கள்.

இந்தச் சூழ்நிலையை அரசு உறுதியுடன் கையாளும்'' என மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளர் ராம் மாதவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக திடீரென வன்முறைகள் அதிகரித்துள்ளன. ஆயுதம் ஏந்திப் போராடும் தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்து வருவது, பாதுகாப்புப் படையினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எழுபது லட்சம் பேர் உள்ள காஷ்மீர் பள்ளத்தக்கில், சுமார் 143 தீவிரவாதிகள் முழுவேகத்துடன் இயங்குவதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. அந்த 143 பேரில், 89 பேர், பெரும்பாலும் தென் காஷ்மீர் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

புர்ஹான் வானி கொல்லப்பட்டதை, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா மறைமுகமாக எதிர்த்திருக்கிறார்.

காஷ்மீர் முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்குமாறு பிரிவினைவாதத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.