அமெரிக்காவில் கறுப்பின ஆண்கள் மீதான துப்பாக்கிச்சூடு: பல நகரங்களில் தொடரும் போராட்டம்

படத்தின் காப்புரிமை AP

அமெரிக்காவில் கறுப்பின ஆண்கள் மீது போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து பல நகரங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

டல்லஸ் நகரில் நிகழ்ந்த கொடிய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து போலிசார் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பொதுமக்களுக்கு அதிபர் ஒபாமா கோரிக்கை விடுத்தார். ஆனால், அதனையும் மீறி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பெரும்பாலான ஆர்ப்பாட்டாங்கள் அமைதியாகவே நடைபெற்றன. அதில், கலந்து கொண்டவர்கள், ''கறுப்பினத்தவர்களின் உயிர்களும் முக்கியம்'' மற்றும் ''கைகளை உயர்த்து, சுட்டுவிடாதே'' போன்ற கோஷங்களை எழுப்பினர்.

கறுப்பின ஆண்கள் மீது போலிஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற லூயிசியனாவின் பேட்டன் ரூஜ் நகரிலும், மின்னெசோட்டாவின் செயிண்ட் பால் நகரிலும் போராட்டக்காரர்கள் மற்றும் போலிசாரிடயே மோதல்கள் நடைபெற்றன.

உச்சபட்ச பதற்றமான சூழ்நிலை இருந்த போதிலும்,1960 காலகட்டத்தில் இருந்த இன வேறுபாடுகளை நோக்கி அமெரிக்கா திரும்ப செல்கிறது என்பதை முன்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.