தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவில் மீண்டும் கலவரம் வெடித்தது

படத்தின் காப்புரிமை Reuters

தெற்கு சூடானின் தலைநகரான ஜூபாவில் அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரெய்க் மச்சர் ஆகியோருக்கு விசுவாசமான படையினர் இடையே மீண்டும் பயங்கர மோதல் வெடித்துள்ளது.

துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் ரியெக் மச்சரின் இல்லத்தை குறிவைத்து சுட்டுத் தள்ளுவதாக ஜூபாவில் உள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நாவின் அகதிகள் முகாம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே கடும் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption துணை அதிபர் ரெய்க் மச்சர் மற்றும் அதிபர் சல்வா கீர்

இந்த முகாம்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்துள்ளனர்.

தெருக்களில் டாங்கிகள் வலம் வர, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களுக்குமுன் தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் காரணமாக ஜூபா விமானதளத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.