மோதலை நிறுத்த தென் சூடான் தரப்புகளைக் கோருகிறது ஐ.நா

தெற்கு சூடானில் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இரு தரப்புகளும் மோதலை நிறுத்தி, வன்முறை பரவுவதைத் தடுக்குமாறு ஐநா பாதுகாப்பு சபை கோரியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தெற்கு சூடானில் மீண்டும் வெடித்த வன்முறை

ஏகமனதாக விடுத்த அறிக்கை ஒன்றில், ஐநா பாதுகாப்பு சபை, இந்த மோதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, ஐநா அலுவலகங்களும் தாக்கப்பட்டது குறித்து குறிப்பான அதிர்ச்சியை வெளியிட்டிருக்கிறது.

இதற்குப் பதில் நடவடிக்கையாக அங்கு மேலும் கூடுதல் எண்ணிக்கையில், ஐநா மன்ற அமைதிப் படைகளை நிறுத்துமாறு கோரியிருக்கிறது.

வெள்ளிக்கிழமையன்று முதல் தெற்கு சூடானில் நடந்து வரும் மோதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

துணை அதிபர் ரியெக் மச்சாருக்கு விசுவாசமான படைகள், அரச படைகள் தங்கள் நிலைகளை, தலைநகர் ஜூபாவில் தாக்கியதாகக் கூறுகின்றன.

நாடு மீண்டும் போருக்குத் திரும்பிவிட்டதாக மச்சாருக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி பிபிசியிடம் ஞாயிறன்று தெரிவித்தார். ஆனால் போர் ஏற்பட்டுவிட்டது என்று கூறப்படுவதெல்லாம் "நேர்மையற்றது" என்று தகவல் துறை அமைச்சர் மைக்கேல் மகுயி லுயெத் வர்ணித்தார்.

தெற்கு சூடானிலுள்ள ஐநா அலுவலகம் நூற்றுக்கணக்கானோர் தனது வளாகங்களில் தஞ்சம் புகுந்திருப்பதாகக் கூறுகிறது.

கடந்த ஆண்ட் போடப்பட்ட அமைதி ஒப்பந்தம் அங்கு அமைதிக்குலைவைத் தடுத்து நிறுத்தத் தோல்வியடைந்திருக்கும் நிலையில், அங்கு ஏற்பட்டிருக்கும் இந்த வன்முறை மீண்டும் தெற்கு சூடானில் ஸ்திரமற்ற சூழல் ஏற்படுமோ என்ற அச்சங்களைத் தோற்றுவித்திருக்கிறது.

தெற்கு சூடான் அதிபர் சல்வார் கீர் மற்றும் மச்சாரின் பாதுகாவலர்களுக்கிடையே நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையால் வெள்ளிக்கிழமை நடந்த மோதல்கள் தூண்டப்பட்டதுபோல் தோன்றுகிறது.

குறைந்தது 150 பேர் இந்த மோதல்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த இரு தலைவர்களும் அதே நாளில் அதிபர் மாளிகையில் சந்தித்து அமைதியை நிலைநாட்டுமாறு கோரினார்கள்.

சனிக்கிழமை அமைதி திரும்பியது ஆனால் ஞாயிற்றுக்கிழமை மச்சாருக்கு விசுவாசமான ராணுவ இருப்பிடங்களுக்கு அருகே பலத்த துப்பாக்கிப் பிரயோகம் நடந்ததாக செய்திகள் கூறின.