பஹ்ரைன்: வலைதளத்தில் பகிர்ந்த கருத்துக்கள் தொடர்பாக நபீல் ரஜாப் மீது இன்று வழக்கு விசாரணை

வளைகுடா நாடான பஹ்ரைனின் ஒரு முன்னணி மனித உரிமைகள் ஆர்வலரான நபீல் ரஜாப், தான் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த கருத்துக்கள் தொடர்பாக எழுந்த குற்றசாட்டுக்களுக்காக இன்று விசாரணைக்கு செல்லவுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption நபீல் ரஜாப்

சிறையில் உள்ள கைதிகளை பஹ்ரைன் நடத்தும் விதம் குறித்தும், ஏமன் நாட்டில் சவூதி அரேபியா தலைமையிலான போரில் பஹ்ரைனின் பங்களிப்பு குறித்தும் எழுதப்பட்ட விமர்சனம் உள்ளடங்கிய கருத்துக்கள் நபீல் ரஜாபால் டிவிட்டர் வலைதளத்தில் பகிரப்பட்டது.

கருத்து சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தீவிர தாக்குதல் இந்த வழக்கு தொடுப்பு என்று வர்ணித்துள்ள மனித உரிமைகள் குழுக்கள், அரசினை இது தொடர்பான குற்றச்சாட்டுக்களை கைவிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

பஹ்ரைன் மனித உரிமைகள் மையத்தினை நிறுவியத்திலிருந்து ரஜாப் பல முறைகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார். கடந்த 2011-இல் நடந்த ஜனநாயக ஆதரவு போராட்டங்களில், ரஜாப் முக்கிய பங்கு வகித்துள்ளார்.