வீட்டையும், வேலையையும் தக்கவைத்துக்கொண்ட லேரி பூனை

லேரி பூனை தனது வேலையைத் தக்கவைத்துக் கொள்ளவிருக்கிறது. தனது வீட்டையும்தான் !

படத்தின் காப்புரிமை GETTY IMAGES
Image caption லேரி பூனை

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் புதன் கிழமையன்று டௌனிங் தெருவில் இருந்து வெளியேறும்போது லேரியையும் வெளியேற்ற வேண்டாம் என்று முடிவாகியுள்ளது.

2011ல் டௌனிங் தெருவில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வந்த லேரி ஒரு பிரபலமான முகம்.

கேமரனுக்கு பதிலாக தெரெசா மே, பிரதமராகி, அந்த இல்லத்திற்கு வரும் போது, ''சீப் மௌசர்' (chief mouser)என்று அறியப்படும்' அந்த பூனை அங்கேயே இருக்கும்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டென் டௌனிங் தெரு இல்லத்தில் லேரி

''இந்த பூனை ஒரு அரசு ஊழியரின் பூனை. கேமரன் குடும்பத்திற்கு சொந்தமானது அல்ல. இங்கேயே அந்த பூனை இருக்கும்,'' என்று அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியின் போது டௌனிங் இல்லத்தில் முன்பக்க கதவு வழியாக ஒரு பெரிய கருப்பு எலி வேகமாக ஓடியதை அடுத்து, லண்டனின் பேட்டர்சீ என்ற பூனை மற்றும் நாய்களுக்கான இல்லத்தில் இருந்து 2011ல் எலிப் பிரச்னையை சமாளிக்கும் வேலை செய்ய இந்த பூனை கொண்டுவரப்பட்டது.

படத்தின் காப்புரிமை BBC World Service

இந்த பூனை ''தீவிரமாக வேட்டையாடும் உந்துதிறன்' கொண்டது- மேலும் எலி பொம்மைகளோடு விளையாடுவதில் அலாதியான விருப்பம் இருந்ததால் லேரி இந்த வேலைக்கு ஏற்றவர் என்று கருதப்பட்டது.

லேரி அதற்கு முன் 10 டௌனிங் வீதியிலிருந்த பல பூனைகளின் கால்தடத்தை அடுத்து அங்கு பணியில் உள்ளது.

படத்தின் காப்புரிமை BBC World Service

ஹம்ப்ரி என்ற பூனை 1989ல் மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த போது 10 டௌனிங் தெருவுக்குள் தற்செயலாக நுழைந்தபோது அது தத்தெடுக்கப்பட்டது. அது தான் முதன் முதலாக பணியில் அமர்த்தப்பட்ட பூனையாகும். ஹம்ப்ரி பூனை 1997ல் பணி ஓய்வு பெற்றது.

கேமரன் பேசும்போது, ''லேரியை தனது புது இல்லத்திற்கு வரவேற்க மகிழ்ச்சியோடு'' இருப்பதாகவும், லேரி ''டௌனிங் தெரு இல்லத்தில் ஒரு நல்ல மேலதிக உறுப்பினராக இருப்பார் , அங்கு வருவோர்களைக் கவருவார்” என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.