பிரிட்டனின் இரண்டாவது பெண்பிரதமராகும் தெரெஸா மே இன்னொரு தாட்சரா?

பிரிட்டனின் இரண்டாவது பெண்பிரதமராகும் தெரெஸா மே இன்னொரு தாட்சரா?

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இன்று (12-07-2016) செவ்வாய்க்கிழமை தனது இறுதி அமைச்சரவை கூட்டத்தை நடத்துகிறார்.

நாளை அவர் தனது அதிகாரத்தை தெரெஸா மேவிடம் ஒப்படைக்க இருக்கிறார்.

தெரெஸா மே தனது புதிய அமைச்சரவையை முடிவு செய்யவேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வலுவான திட்டம் ஒன்றையும் அவர் வகுக்கவேண்டும்.

பிரிட்டிஷ் அரசில் அதிக அனுபவமுள்ள அமைச்சர் தெரெஸா மே. கடுமையான உழைப்பாளி, கவனமான அமைச்சர் என்று பெயரெடுத்தவர். தன் சகாக்களோடு விருந்துபசார கேளிக்கைகளில் அதிகம் ஈடுபடுவதில்லை என்பதை அவரே ஒப்புக்கொள்பவர்.

உள்ளூர் மதபோதகரின் மகளாக பிறந்து வளர்ந்தவர். இவரது தாத்தா இராணுவத்தின் ரெஜிமெண்டல் செர்ஜெண்ட் மேஜராக இருந்தவர். தன் நினைவு தெரிந்த நாளிலிருந்து பொதுசேவை தன்னில் ஒரு அங்கமாகவே இருந்து வருவதாக கூறுகிறார் தெரெஸா மே.

தெரெசா மேவுக்கு வயது 59. அரசு பள்ளியில் படித்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1997 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன் அவர் ஆறாண்டுகாலம் வங்கித்துறையில் பணிபுரிந்தார்.

தற்போது அதிகபட்ச ஆதரவோடு பிரதமாராகிறார். ஆனால் கடந்தகாலத்தில் கட்சியைப்பற்றி சில கசப்பான விமர்சனங்களை முன்வைத்து சர்ச்சையில் சிக்கியவர். பொதுமக்களில் சிலர் கன்சர்வேடிவ் கட்சியை மோசமான கட்சியாக பார்க்கிறார்கள் என்று அவர் கட்சி மாநாட்டிலேயே கூறினார். காவல்துறையின் தொழிற்சங்கத்தோடு மோதினார். ஒருபாலினத்தவர் திருமணத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

பிரிட்டனின் உள்துறை அமைச்சராக அவர் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்கவேண்டுமா என்பதற்கான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், இவர் நீடிக்க வேண்டும் எனும் தரப்பில் இருந்தாலும் அதற்காக ஆர்வமாக பிரச்சாரம் செய்யவில்லை.

தற்போது பிரிட்டனின் வெளியேற்றம் என்ன என்பதை அவர் விளக்க ஆரம்பித்திருக்கிறார்.

"பிரிட்டன் வெளியேற்றம் என்றால் வெளியேறுவது தான். அதை நாங்கள் வெற்றிபெற வைப்போம். ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க எந்த முயற்சியும் செய்யமாட்டோம். பின்வாசல் வழியாக அதில் மீண்டும் இணைய முயல மாட்டோம். இரண்டாவது வாக்கெடுப்பும் இருக்காது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக நாடு வாக்களித்தது. நாட்டின் பிரதமராக, நான் அதை நிறைவேற்றிக்காட்டுவேன்”, என்கிறார் தெரெஸா மே.

தலைமைப்பதவிக்குரிய கவர்ச்சி அவரிடம் இல்லை என்று சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் அவரது ஆதரவாளர்களோ, அவரது அனுபவ அறிவே அரசை நடத்த அவசியமானது என்று வலியுறுத்துகிறார்கள்.