உகாண்டா: கிஸா பெஸிஜி பிணையில் விடுதலை

தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, இரண்டு மாதங்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த உகாண்டாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான கிஸா பெஸிஜிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சர்ச்சைக்குரிய வகையில் நடந்த அதிபர் தேர்தலுக்கு பிறகு, தன்னை தானே அதிபராக அறிவித்துக் கொண்டது மற்றும் அதற்கான பதவியேற்பு விழாவினை நடத்தியது ஆகியவை தொடர்பாக கிஸா பெஸிஜி மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

30,000 டாலர்கள் மதிப்பிலான தொகைக்கு பிணை வழங்கிய நீதிபதி, அவரது கட்சி தலைமையகத்தில் நடக்கும் வாராந்திர பிரார்த்தனைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட தன் கட்சி பரப்புரையை பெஸிஜி நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் போது, கூடியிருந்தவர்களை நோக்கி வெற்றிக் குறியீடு அடையாளத்தை விரல்களால் காண்பித்த பெஸிஜி, போலீஸ் காவலை விட்டு தான் வெளியே வந்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டார்.

உகாண்டாவில் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கள் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. ஆனால், அங்கு கடந்த பல வருடங்களாக மரண தண்டனை வழங்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.