பிரான்ஸ் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம்

பிரான்ஸின் நீஸ் நகரத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு உலகம் முழுக்க பரவலான கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

படத்தின் காப்புரிமை ANNE CHRISTINE POUJOULAT AFP Getty Images

தீவிரவாத தாக்குதலில் குறைந்தது 84 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரான்ஸ் அதிபர் ஃபிராங்ஸ்வா ஒல்லாந் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மங்கோலியாவில் நடைபெற்று வரும் ஐரோப்பிய மற்றும் ஆசிய தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ஜெர்மனி அதிபர் ஏங்கெலா மெர்கல்,

பிரான்ஸின் கூட்டணி நாடுகள் அடைந்துள்ள துயரத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா இதனை மிகக் கொடூரமான படுகொலை என்றும், பிரான்ஸுக்கு அமெரிக்கா துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இந்த தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என்றும், கோழைத்தனமானது என்றும் கூறியுள்ளது.

சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்று கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது சோகமான முரண்பாடு என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியாலும் சுட்ட ஓட்டுநர்

தேசிய தினத்தின் நிறைவு நாளை குறிக்கும் விதமாக நடைபெற்ற வாண வேடிக்கைகளை காணக் கூடியிருந்த கூட்டத்திற்குள் மிக வேகமாக, ஒரு லாரி புகுந்தது.

லாரி ஓட்டுநரை போலீஸ் சுட்டுக் கொல்வதற்கு முன், ஓட்டுநரும் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள்.

லாரிக்குள் துப்பாக்கிக்களும், கையெறி குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை
லாரி ஓட்டுநர் யார்?

இதுவரை லாரியை ஓட்டி வந்தவர் விவரம் தெரியவில்லை. ஆனால், லாரிக்குள் இருந்த அடையாள அட்டைகளை வைத்து, அவர் 31 வயதுடைய துனீஷிய வம்சாவளியை சேர்ந்த பிரஞ்சுக்காரர் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அந்த ஓட்டுநர் நீஸ் பகுதியில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

ஓட்டுநர் இந்த லாரியை தனித்து இயக்கினாரா அல்லது அவருடன் வேறு கூட்டாளிகள் இருந்தனரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

நீஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ரத்தம் வழங்க நாடு முழுவதும் பிரஞ்சு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த தாக்குதலில் பல குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. காணாமல் போன தங்கள் சொந்தகளை உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.