9/11 தாக்குதலின் விசாரணை பகுதிகளை வெளியிடுகிறது அமெரிக்கா அரசு

9/11 தாக்குதல் குறித்த நாடாளுமன்ற விசாரணையின் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பகுதிகளை நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்கா அரசு வெளியிட உள்ளது.

இதுநாள் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 28 பக்கங்களை வெளியிடுமாறு 9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் நீண்ட ஆண்டுகளாக அழுத்தம் தந்து வந்தனர்.

இந்த பக்கங்கள் 9/11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்தான ஊகங்களை தூண்டின.

9/11 தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் சவுதியை சேர்ந்தவர்கள்.

மேலும், இவர்கள் சவுதியின் அதிகாரப்பூர்வ ஆதரவை பெற்றிருந்தனரா என்பது குறித்து பெரும் யூகங்கள் நிலவின.

எனினும், இந்த பக்கங்களில் தாக்குதலுக்கு சவுதி உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசின் இந்த வெளியீட்டை வரவேற்றுள்ள அமெரிக்காவுக்கான சவுதி அரேபியா தூதுவர், சவுதி அரேபியா மீதான சந்தேகங்களை இது துடைக்கும் எனவும், அமெரிக்கா மீது தங்கள் நாடு கொண்டுள்ள நோக்கங்களை புரிய வைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.