நீஸ் தாக்குதலாளிக்கு தீவிரவாதப் பயிற்சி: பிரான்ஸ் அமைச்சர் கருத்து

  • 16 ஜூலை 2016

எண்பதுக்கு அதிகமானோர் கொல்லப்பட்ட நீஸ் கனரக லாரி தாக்குதலை நடத்திய நபர், மிக விரைவாக தீவிரவாத நோக்கம் கொண்டவராக மாற்றப்பட்டிருக்கலாம் என்று பிரான்சின் உள்துறை அமைச்சர் பெர்னாடு கசென்யுவ் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இஸ்லாமிய அரசு தீவிரவாத குழுவோடு தொடர்பில்லாதவர் இத்தகைய தாக்குதலை நடத்தினாலும் அந்த குழுவினர் நடத்துவதாகவே மக்கள் நம்புகின்றனர்.

தடுப்பதற்கு மிகவும் கடினமான புதிய வடிவத் தாக்குதலாக இது அமைந்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்லாமிய அரசு குழுவால் பயிற்சி அளிக்கப்படாத அல்லது அதற்காக போராடாதவர்களாக இருந்தாலும், அந்த குழுவின் சார்பாக இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாக மக்களால் நம்பப்படுகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, இராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய அரசு குழுவுக்கு எதிராக போராடி வருகின்ற நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்கு தாங்கள் அழைப்பு விடுத்ததன் மறுமொழியாகத்தான், அந்த குழுவுக்கு விசுவாசமான ஒருவரால் நீஸ் நகரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.எஸ்.தெரிவித்தது.