துருக்கியில் ராணுவ அதிரடிப் புரட்சி முயற்சி

  • 16 ஜூலை 2016

துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவு அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்ததை அடுத்து, அதிபர் எர்துவான், தலைநகர் அங்காராவிலிருந்து, நாட்டின் பெருநகரான இஸ்தான்புல்லுக்கு வந்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

முன்னதாக ஒரு ராணுவக்குழு, நாட்டை ஒரு "அமைதிக் கவுன்சில்" தற்போது நடத்துவதாகவும், நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மற்றும் ராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தது.

படத்தின் காப்புரிமை AP

ஆனல் பின்னர் பேசிய துருக்கிப் பிரதமர் பினாலி யில்டிரிம், நிலைமை தற்போது பெருமளவு கட்டுக்குள் இருப்பதாகவும், தலைநகர் அங்காராவின் வான் பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

"தேசத்துரோக நடவடிக்கை"

இஸ்தான்புல்லுக்கு விமானம் மூலம் வந்தடைந்த அதிபர் எர்துவானை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.

படத்தின் காப்புரிமை Getty

தொலைக்காட்சிக்கு நேரலையில் பேசிய எர்துவான், இந்த அதிரடிப் புரட்சி முயற்சி ஒரு தேசத்துரோக நடவடிக்கை என்று கூறினார்.

முன்னதாக படையினர் இஸ்தான்புல்லில் முக்கிய இடங்களில் காணப்பட்டனர். அங்காராவில் போர் விமானங்கள் வானில் தாழப் பறந்து கொண்டிருந்தன.

இஸ்தான்புல்லின் மையப்பகுதியில் இருக்கும் தக்ஸிம் சதுக்கத்தில் இரு பெரிய குண்டு வெடிப்பு சத்தங்களும் கேட்டன.

அங்காராவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் குண்டு வெடிப்புகள் நடந்ததாகவும் செய்திகள் வந்தன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பதுங்குமிடங்களில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty

சி.என்.என்.துருக்கிப் பிரிவு தொலைக்காட்சி நிலையம் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் நேரலை ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஒபாமா கோரிக்கை

யார் இந்த அதிரடிப் புரட்சி முயற்சிக்கு தலைமை தாங்குகிறார்கள் அல்லது அவர்களுக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறது என்பது தெளிவாகவில்லை.

சில உயர் ராணுவ அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AA

துருக்கியில் மக்கள் குழப்பத்திலும் ஆச்சரியத்திலும் இருக்கிறார்கள் என்று இஸ்தான்புல்லில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா துருக்கியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் " ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசை" ஆதரிக்குமாறு கோரியுள்ளார்.

துருக்கியில் ஜனநாயக அமைப்புகளுக்கு "முழுமையான மரியாதை" தரப்பவேண்டுமென்று நேட்டோ கோரியுள்ளது.

இந்த நடவடிக்கை ஒரு "இணை அமைப்பால்" செய்யப்பட்டது என்று முன்னதாக எர்துவான் சி.என்.என்.துருக்கி தொலைக்காட்சிக்கும் மொபைல் தொலைபேசி மூலம் தெரிவித்தார். இதற்கு தேவையான பதிலடி தரப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த 'இணை அமைப்பு' என்ற பதத்தை அவர் கடந்த காலங்களில் ஃபெத்துல்லா குலன் என்ற அமெரிக்காவிலிருந்து செயல்படும் முஸ்லீம் மதகுருவைப் பற்றிக் குறிப்பிட பயன்படுத்தியிருக்கிறார். அவர் துருக்கியில் குழப்பம் விளைவிப்பதாக எர்துவான் குற்றம் சாட்டிவருகிறார்.