அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 3 போலீசார் பலி

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்காவில் லூயிசியானா மாகாணத்தில் போலிசாரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவர்களில் ஒருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பலர் காயமடைந்திருப்பதால், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

முகத்தை மறைத்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த ஆயுததாரியை பிடிக்கும் முயற்சியில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்த நபர் கறுப்பு ஆடை அணிந்து, முகத்தை துணியால் மூடியபடி வந்ததாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடந்த அந்த பகுதி தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்குமுன், பேட்டன் ரூஜ் நகரை சேர்ந்த ஆல்டன் ஸ்டெர்லிங் என்ற கருப்பின நபர் போலிசாரால் கீழே தள்ளப்பட்டபின் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த நகரில் பதற்றம் அதிகரித்திருந்தது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட அதிகாரிகளுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்குமாறு பேட்டன் ரூஜ் நகரின் மேயர் கிப் ஹோல்டன் கேட்டு கொண்டுள்ளார்.