ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் கிருமிகள்: துருக்கி அதிபர் எர்துவான்

படத்தின் காப்புரிமை Getty

கடந்த வெள்ளிக்கிழமையன்று, துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணமானவர்களை கிருமி என அழைத்துள்ள அதிபர் எர்துவான், அரசு நிறுவனங்களை சுத்தப்படுத்தவும் சபதம் எடுத்துள்ளார்.

இந்த சதிக்கு திட்டம் தீட்டியவர்கள் இனி எங்கும் ஓடி ஒளிய முடியாது என தெரிவித்துள்ளார்.

துருக்கி ராணுவத்தில் உள்ள அதிபருக்கு நெருங்கிய உயர் மட்ட உதவியாளர் ஒருவருக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்சிர்லிக் விமான தளத்தின் தளபதியும் அதில் அடங்குவார் என்றும் துருக்கி நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் அமெரிக்கா இந்த விமான தளத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த விமான தளத்திலிருந்து ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதாக பென்டகன் அறிவித்துள்ளது.