பேட்டன் ரூஜ்: கட்டுப்பாடு கோருகிறார் ஒபாமா

அமெரிக்காவின் பேட்டன் ரூஜ் நகரில் ஞாயிறன்று மூன்று போலிஸ் அதிகாரிகள் கறுப்பினத்தவர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து , அதிபர் ஒபாமா கட்டுப்பாட்டைக் கோரியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பேட்டன் ருஜ் போலிசார் -- பதற்ற நிலை அதிகரிக்கும் நகரில் வன்முறைகள்

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட, அமெரிக்க சிறப்பு ராணுவப்பிரிவான, மரைன்கள் பிரிவில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஆப்ரிக்க அமெரிக்கரும் கொல்லப்பட்டார்.

கறுப்பினத்தவரான , ஆல்டன் ஸ்டெர்லிங், போலிசாரால் இரண்டு வாரங்களுக்கு முன் பேட்டன் ரூஜ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து நகரில் பதற்ற நிலை அதிகமாகவே இருந்து வந்தது. ஆனால் ஞாயிறன்று நடந்த இந்த கொலை சம்பவங்கள் அந்த சம்பவத்துடன் தொடர்புடையதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

கொல்லப்பட்ட போலிசார், அந்தப்பகுதியில் ஆயுதந்தாங்கிய ஒரு ஆண் உலவுவதாக வந்த செய்திகளை விசாரித்துக்கொண்டிருந்தனர்.

சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை எதுவும் நியாயப்படுத்தாது என்றும், அமெரிக்கர்கள் ஒன்றுபடவேண்டும் என்றும் ஒபாமா கூறியுள்ளார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட , அதிபர் தேர்தலுக்கான குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ஒபாமாவிற்குத் தலைமைத்துவ பண்புகள் போதவில்லை என்று விமர்சித்தார்.

நாடு குற்றச்சம்பவங்களால் பிளவுண்டு காட்சிதருகிறது என்று ட்ரம்ப் வர்ணித்தார்.