பிரான்ஸில் பிணைக் கைதிகளை பிடித்து வைத்த இருவர் சுட்டுக்கொலை

பிரான்ஸில் ரூவாங் நகருக்கு அருகில், தேவாலயம் ஒன்றில் பல பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த, ஆயுதம் தாங்கிய இருவரை வடக்கு பிரான்ஸில் உள்ள போலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

படத்தின் காப்புரிமை

சயிண்ட் எட்டினே டு ரூவ்ரே என்ற இடத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நான்கிலிருந்து ஆறு பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதில் பிணையக் கைதியாக பிடித்து வைத்திருந்த மூத்த பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை aptn

இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என வாடிகன் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்த், சம்பவ இடத்திற்கு வந்தடைந்துள்ளார்.

ஜிகாதி அனுதாபி ஒருவர் நீஸ் நகரில் டிரக்கை ஓட்டிச் சென்று 84 பேரைக் கொன்ற சம்பவம் நடந்து இரண்டு வாரத்தில், இந்த தாக்குதல் நடந்தேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.