ஜப்பான்: 19 மாற்றுத்திறனாளிகளைக் கொன்றவர் கைது

ஜப்பான்: 19 மாற்றுத்திறனாளிகளைக் கொன்றவர் கைது

ஜப்பானில் மாற்றுத்திறனாளிகளுக்கான மையத்தில் ஒரு நபர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்.

டோக்யோ நகருக்கு தென் மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சகமிஹாரா நகரிலிருக்கும் அந்த மையத்தில் இருந்தவர்களே இப்படி கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மையத்தில் 149 பேர் இருந்தனர். உள்ளூர் ஊடகங்களில் சடோஷி உமாட்சு என்று அழைக்கப்படும் 26 வயதுடைய ஆண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அந்த மையத்தின் முன்னாள் பணியாள் என்று கூறப்படும் அந்த நபர் தானே வாகனம் ஓட்டிச்சென்று காவல்நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்போடு இந்த தாக்குதலாளிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று தெரிவித்த அமைச்சரவையின் தலைமைச் செயலர் யொஷிஹிடி சுகா, இது குறித்த காவல்துறையின் புலனாய்வு தொடர்வதாகவும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் உடற்குறைபாடுடையவர்களை தான் கொல்லப்போவதாக இவர் நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அப்போது அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

உடல் ஊனமுற்றவர்கள் அனைவரும் மறைந்துபோக வேண்டுமென தான் விரும்புவதாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜப்பானில் தனி நபர் ஒரே சமயத்தில் செய்த மோசமான பலகொலைகளில் ஒன்றான இதில் என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்வதற்கான காவல்துறையின் புலனாய்வு தொடர்கிறது.