கல்லீரல் அழற்சி- அமைதியாகக் கொல்லும் நோய்

ஹெபடிட்டிஸ் - சி என்றழைக்கப்படும் கல்லீரல் அழற்சியானது, பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் உலகளாவிய சுகாதார பிரச்சினையாகவும், உலகம் முழுவதும் அதிகரிக்கும் இறப்புகளுக்குக் காரணமாகவும் உள்ளது.

ஆனால், இந்த நோய் பீடித்தவர்கள், தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதையே அறிந்திருப்பதில்லை. இதன் காரணமாக, சோதனை என்பது அவசியமாகிறது. இந்தியா, நெதர்லாந்து, மங்கோலியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மேற்கொண்டு வரும் திட்டங்கள் விழிப்புணர்வை அதிகரிப்பதால் பாராட்டுப் பெற்று வருகின்றன.

படத்தின் காப்புரிமை PUNIT PARANJPE AFP

மருத்துவ வல்லுநர்கள் ஹெபடிட்டிஸ்-சி-யை அமைதி தொற்றுநோய் என்று அழைக்கிறார்கள். காரணம், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில், 95 சதம் நோயாளிகள் தங்களுக்கு அந்த நோய் தொற்று இருப்பதை அறிவது கிடையாது.

ஆண்டுதோறும் உலக அளவில் ஹெபடிட்டிஸ் சி நோயினால் பாதிக்கப்படும் 150 மில்லியன் பேரில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்வது கிடையாது. இதன் காரணமாக, ஆண்டிற்கு 700,000 உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு தடுப்பு மருந்தும் கிடையாது.

பல ஆண்டுகளுக்கு இந்த நோயின் அறிகுறிகளின்றி மக்களால் வாழ முடியும். ஹெபடிட்டிஸ் சி வைரஸால் (எச்.சி.வி) தாங்கள் தாக்கப்பட்டிருப்பதை மக்கள் உணரும் போது, பெரும்பாலும் சிகிச்சை எடுப்பதற்கான காலம் கடந்துவிடுகிறது. அந்த சமயம், கல்லீரல் சேதம் அடைந்து கல்லீரல் நோயாகவும் அல்லது புற்றுநோயாகவும் வளரலாம்.

உலகளாவிய அமைதி உயிர் கொல்லி

130-150 மில்லியன்

நாள்பட்ட ஹெப்படிட்டிஸ் சி நோயால் தாக்குண்டவர்கள்

  • 95% பேர் ஹெப்படிட்டிஸ் பி அல்லது சி நோயினால் தாக்கப்பட்டிருப்பதை அறியாதவர்கள்

  • 700,000 பேர் ஆண்டுத்தோறும், ஹெப்படிட்டிஸ் சி நோயினால் தொடர்புடைய கல்லீரல் நோயினால் உயிரிழக்கிறார்கள்.

GETTY

எய்ட்ஸ், காச நோய் மற்றும் மலேரியா போன்று உலகளவில் இருக்கக்கூடிய தொற்று நோய்களால் ஏற்படக்கூடிய இறப்பு விகிதமானது கடந்த 15 ஆண்டுகளில் கணிசமான அளவு குறைந்துள்ளது. ஆனால், எச்.சி.வி வைரஸால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

மற்ற நோய்களை காட்டிலும் ஹெபடிட்டிஸ் நோய்க்கு கொள்கை வகுப்பவர்களின் கவனமின்மை மற்றும் போதிய நிதி ஒதுக்கப்படாதது ஆகியவையே காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மருத்துவ உபகரணங்களில் போதிய சுத்தமின்மை அல்லது பரிசோதிக்கப்படாத ரத்தம் ஏற்றப்படும் போது ஹெபடிட்டிஸ் வைரஸானது ரத்தம் மூலம் பரவுகிறது. இதில், பெரும்பான்மையான தொற்று நோய்கள் ஊசி பகிர்வின் மூலம் வருகின்றன.

உலகளவில் எச்.சி.வியால் தாக்கப்படும் புதிய நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர், ஊசி மூலம் போதை மருந்துகளை பயன்படுத்துபவர்களிடம் உள்ள பாதுகாப்பற்ற நடைமுறைகள் காரணமாகவே இந்நோயால் தாக்கப்படுகின்றனர்.

''ஹெபடிட்டிஸ் நோயினால் தேவையின்றி மக்கள் பலியாவதை தடுக்க உடனடியாக நாம் செயல்பட வேண்டும்'' என்று பிபிசியிடம் சொல்கிறார் உலக சுகாதார மையத்தின் உலகளாவிய ஹெபடிட்டிஸ் திட்டத்தின் இயக்குநர் மருத்துவர் கோட்ஃபிரைய் ஹீர்ன்ஷெல்.

ஹெபடிட்டிஸ் சோதனையின் போது, வைரஸை கண்டறிந்துவிட்டால், ஹெபடிட்டிஸ் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மூலம் 90% ஒருவரை காப்பாற்ற முடியும். அதனால், பரிசோதனை என்பது முக்கியமாகிறது. ஹெபடிட்டிஸ் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், வைரஸ் கண்டறியும் சாத்தியக்கூறுகளை மேம்படுத்தவும் உலகில் உள்ள நாடுகள் சிறந்த வழிகளை ஆராய்ந்து வருகின்றன.

உயிர் காக்கும் பரிசோதனை

வட கிழக்கு இந்தியாவில் உள்ள சிறிய மாநிலமான மணிப்பூரில், உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட திட்டம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு போதை பழக்கத்துக்கு உள்ளானவர்கள் இடையே ஹெபடிட்டிஸ் சி என்பது பரவலாக உள்ளது. போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களில் 98% வரை இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலவச எச்.ஐ.வி பரிசோதனைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டாலும், எச்.சி.விக்கு அதற்கு ஈடான முக்கியத்துவம் தரப்படவில்லை.

படத்தின் காப்புரிமை Paula Bronstein GETTY IMAGES

அதனால், மாநிலம் முழுக்க பரவலாக பரிசோதனைகளை மேற்கொள்ள சமூக கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

''பிராண்டுகள் இல்லாத மருந்துகளைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மிகப் பெரிய அளவிலான பரிசோதனைகளை மேற்கொண்டு உள்ளோம். தொற்று நோயை விரைவாக கண்டறியும் கருவிகளை இந்நிறுவனங்கள் வழங்கி உள்ளன'' என்கிறார் இந்த சமூகக் கட்டமைப்பு மேம்பாட்டின் தலைவர் ராஜ்குமார் நளினிகந்தா.

சுமார் 1,100 பேர் இதில் பங்கெடுத்தார்கள். அதில், பாதிப் பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

''சிகிச்சைகளுக்காக மருந்துகளை நல்ல விலைக்கு வாங்க மருந்து நிறுவனங்களிடம் பேரம் பேசவும் எங்களுக்கு வாய்ப்பு அமைந்தது. இந்த திட்டத்திற்குமுன், இப்பகுதிகளில் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் விலை மிகவும் அதிகாமாக இருந்தது. ஆனால், இறுதியில் இந்தியாவில் மற்ற பகுதிகளை காட்டிலும், இங்கு குறைந்த விலைக்கு கிடைக்கிறது'' என்று பிபிசியிடம் சொல்கிறார் நளினிகந்தா.

கைகொடுத்த சைக்கிள் பிரச்சாரம்

நெதர்லாந்தில், ஆபத்தில் இருக்கும் நோயாளிகளை அடையாளம் காண இணையம் சார்ந்த சுயமதிப்பீடு செய்யும் கருவி வழங்கப்பட்டது.

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இணையதளத்தில் நுழைய, வல்லுநர்கள் சைக்கிள்கள் சார்ந்த பிரசாரம் ஒன்றை மேற்கொண்டனர். சைக்கிள் சீட்களுக்கு சிவப்பு நிற கவர்களை கொடுத்தனர்.

படத்தின் காப்புரிமை PUBLIC HEALTH SYSTEM OF AMSTERDAM

''இங்கு அதிகம் பேர் சைக்கில் ஓட்டுகிறார்கள். அவர்களுடைய கவனத்தை பெற விரும்பினோம். அதன் காரணமாக, அவர்களுடைய சீட்களை நாங்கள் பயன்படுத்தினோம்'' என்று பிபிசியிடம் கூறினார் ஆம்ஸ்டெர்டேம் பொதுச் சுகாதார சேவையை சேர்ந்த ஜான்கே ஷிங்கெல்.

இணையம் வழியாக கேட்கப்படும் கேள்விகளைப் பூர்த்தி செய்தபின், 'அபாய' கட்டத்தில் இருப்பவர்கள் என்று பட்டியலிடப்பட்டவர்கள், பெயர் குறிப்பிடாமல் ரத்த பரிசோதனை செய்வதற்கான இலவச பரிந்துரை கடிதத்தை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பின் ஒருவாரம் கழித்து, ரத்த பரிசோதனையின் முடிவுகளை இணையம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.

படத்தின் காப்புரிமை FIRE

''இந்த திட்டத்தின் மூலம் புதிய தொற்று ஏற்படுவதை குறைப்பதே எங்கள் நோக்கம்'' என்கிறார் மருத்துவர் ஷிங்கெல்.

கிராமப்புறங்களிலிருந்து சிறைச்சாலை வரை

உலகிலே கல்லீரல் புற்றுநோயில் அதிக விகிதத்தை --சர்வதேச சராசரியைவிட 6 மடங்கு -- மங்கோலியா பெற்றுள்ளது.

அதிக அளவிலான ஹெபடிட்டிஸ் வைரஸ் தொற்று ஏற்படும் நாடுகளில் மங்கோலியா, எகிப்து மற்றும் கேபனுக்கு அடுத்தபடியாக பிரதான இடத்தில் உள்ளது.

படத்தின் காப்புரிமை AFP and GETTY IMAGES

ஆஸ்திரேலியா, குறிப்பிட்ட ஒரு பகுதியில் எச்.சி.வி தொற்றுநோயை சமாளித்து வருகிறது. அதுவேறு எங்கும் அல்ல, சிறைச்சாலைகளில் தான். சிறைகளில் உள்ள பாதிப்பேர் ஹெபடிட்டிஸ் நோயினால் பாதிப்படைந்துள்ளனர்.

உலகிலே, முதன் முறையாக விக்டோரியா மாகாணத்தில் உள்ள 13 தடுப்பு மையங்களில் ஹெபடிட்டிஸ் பரிசோதிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி, சிறைவாசம் அனுபவிக்க சிறைக்குள்ளே வருபவர்களுக்கும், வேறு சிறைகளுக்கு மாறிச் செல்பவர்களுக்கும் முறையான ஹெபடிட்டிஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது உலகிலேயே இது போன்று நடக்கும் முதல் முயற்சியாக கருதப்படுகிறது.

எகிப்து, ஜார்ஜியா மற்றும் கென்யா போன்ற நாடுகளிலும் இந்தத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

எச்.சி.வி நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளை தயாரிக்க குறைந்த செலவே ஆகும் போது அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், வெறும் பரிசோதனை முயற்சிகள் மட்டுமே போதாது என சில வல்லுநர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர்.

ஹெபடிட்டிஸ் சி நோய்க்கு எதிரான போரில், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கையிலே உள்ளது.

அவர்கள், இந்த ஹெபடிட்டிஸ் நோயைக் கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை சுலபமாக அணுகவும், மலிவு விலையில் கிடைக்கவும் வழி செய்ய வேண்டும்.

உலகம் முழுக்க ஹெபடிட்டிஸ் சி நோயின் தாக்கம்