அதிபர் வேட்பாளருக்கான நியமனத்தை ஏற்றார் ஹிலரி

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஜனநாயகக் கட்சி மாநாட்டில் உரையாற்றும் முன்னதாக, ஆதரவாளர்களுடன் ஹிலரி

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான நியமனத்தை ஹிலரி கிளிண்டன் ஏற்றுக்கொண்டார்.

ஃபிலடெல்பியாவில் நடைபெற்ற கூட்டத்தில் தனது நியமனத்தை ஏற்ற ஹிலரி, தன்னை எதிர்த்துப் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப், அதிபராகப் பதவி வகிப்பதற்கான பண்பும், அனுபவமும் அறவே அற்றவர் என்று சாடினார்.

தன்னால்தான் நாட்டின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று டரம்ப் வெளிப்படுத்தும் ஆரவாரங்கள் எல்லாம் எடுபடாது என்று ஹிலரி கேலி செய்தார்.

ஒரு சிறு தூண்டுதலுக்கே தனது நிலையை மறந்துவிடும் ட்ரம்பினால், எப்படி தலைமைத் தளபதியாக செயல்பட முடியும் என்று ஹிலரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில், ட்விட்டர் கருத்தில் அவருக்கு தூண்டில் போட்டுவிட முடியும் என்று இருக்கும் நிலையில், அப்படிப்பட்ட நபரிடம் அணு ஆயுதங்களுக்கான பொறுப்பைக் கொடுப்பது எப்படி சரியாக இருக்கும் என்று ஹிலரி கேள்வி எழுப்பியுள்ளார்.