ரியோ ஒலிம்பிக்ஸ்: ரஷ்ய அணியின் பங்கேற்பு குறித்து இறுதி முடிவெடுக்க 3 நபர் குழு ஐஓசி அமைப்பு

வரும் வெள்ளிக்கிழமையன்று துவங்கவுள்ள ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில், ரஷ்ய விளையாட்டு வீரர்கள் பங்கேற்க முடியுமா என்பது குறித்து இறுதி முடிவெடுக்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மூன்று நபர் குழு ஒன்றை அமைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை

ரஷ்ய அரசின் ஆதரவோடு அந்நாட்டு விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தகவல் வெளிப்படுத்தப்பட்டாலும், ரஷ்ய அணி மீது ஒட்டுமொத்த தடை விதிக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) மறுத்து விட்டதால், இது குறித்து ஐஓசி மீது கடந்த வாரம் பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.

ரஷ்ய அணி மீது ஒட்டுமொத்த தடை விதிப்பதற்கு பதிலாக, தனி போட்டியாளர்களை போட்டியில் பங்கேற்க அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கும் பணியை, அந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் விளையாட்டு பிரிவின் நிர்வாக அமைப்புகள் செய்யலாம் என்று ஐஓசி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரியோவில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகையில், ஒலிம்பிக்ஸ் போட்டி துவங்க 5 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தடகள வீரர்களை தடைசெய்வதா என்பது குறித்து தற்போது ஐஓசி முடிவு செய்து கொண்டிருப்பது மிகவும் அசாதாரணமாக உள்ளதாக தெரிவித்தார்.