"கையை விட்டுப் போன" பணம் 10 ஆண்டுக்குப் பின் திரும்ப வந்தது !

உங்களில் பலர் பண நோட்டுகளில் விளையாட்டாக உங்கள் கையெழுத்தைப் போட்டு புழக்கத்தில் விட்டிருப்பீர்கள் . எத்தனை பேருக்கு அவ்வாறு அவர்கள் கையெழுத்து போட்ட பண நோட்டுகள் திரும்ப வந்து சேரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது ?

தனது பதின்ம வயதில் விளையாட்டாக கையெழுத்து போட்ட ஒரு 10 பவுண்டு நோட்டு மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தனக்கே வந்து சேர்ந்த ஆச்சரியத்தை ஒரு பிரிட்டிஷ் இளைஞர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty

இங்கிலாந்து பிரதேசமான ஸ்டாஃப்ஃபோர்ட்ஷயரில் வசிக்கும் அலெக்ஸ் கேம்ப்பெல் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு 10 பவுண்டு நோட்டில் விளையாட்டாக தன் கையெழுத்தைப் போட்டு புழக்கத்தில் விட்டார்.

இப்போது அவரது நண்பர் ஒருவர் லண்டனில் உள்ள தானியங்கி பணம் தரும் இயந்திரத்திலிருந்து பணம் எடுத்தபோது, அவர் கையெழுத்திட்ட அந்த 10 பவுண்டு நோட்டு மீண்டும் வந்தபோது அவர் ஆச்சரியமடைந்தார்.

பொதுவாக இது போல ஒருவர் கையைவிட்டு போன அதே நோட்டு மீண்டும் அவர் கைக்கே வருவதற்கான வாய்ப்புகள் புள்ளிவிவரயியல் ரீதியாக மிகவும் சொற்பமே என்று கருதப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு புள்ளிவிவரயியலாளர் ஒருவர் கூறுகையில், பொதுவாக கரன்சி நோட்டுகள் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதால், ஒரு நோட்டு சில ஆண்டுகளுக்குப் பின் புழக்கத்தில்கூட இருப்பதற்கான வாய்ப்பு என்பது 0.1 சதவீதம்தான் என்று கூறினார்.

எப்படியோ, "கையை விட்டுப் போன பணம்" திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் போலும் அந்த பிரிட்டிஷ்காரர் !